திருப்பூரில் வங்கதேசத்தினர் 6 பேருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை
திருப்பூர், 18 பிப்ரவரி (ஹி.ச.) திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த ஆறு பேருக்கு இரண்டு ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் பகுதியில
Prison


திருப்பூர், 18 பிப்ரவரி (ஹி.ச.)

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த ஆறு பேருக்கு இரண்டு ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உரிய பயண ஆவணங்கள் மற்றும் குடியிருப்பு அனுமதி ஆவணங்கள் இன்றி தங்கியிருந்ததாக தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் வங்கதேசத்தை சேர்ந்த முகமது ராகுல் அமீன் (32), முகமது அல்சம் (43), ரசிப் டவுன் (36), முகமது அல் இஸ்லாம் (39), சுமன் ஷேய்க் (40), தன்வீர் (41) ஆகியோர் சட்டவிரோதமாக தங்கியிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் ஆறு பேரையும் போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு திருப்பூர் இரண்டாவது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கின் போது குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்கள், போலீசார் தாக்கல் செய்த அறிக்கைகள் மற்றும் சாட்சிகள் ஆகியவை நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன.

உரிய ஆவணங்கள் இன்றி நாட்டில் தங்கியிருந்தது உறுதியாக நிரூபிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீதர், குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேருக்கும் தலா இரண்டு ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்ததுடன், தலா பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதல் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த தீர்ப்பு, சட்டவிரோத குடியேற்றம் தொடர்பான வழக்குகளில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்பதற்கான எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டு நபர்கள் இந்தியாவில் தங்குவதற்கு உரிய பாஸ்போர்ட், விசா மற்றும் பிற சட்டபூர்வ ஆவணங்கள் கட்டாயம் தேவை என்பதையும் அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN