Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 பிப்ரவரி (ஹி.ச.)
சென்னை மாநகராட்சியின் 2026-27 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் இன்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.
மேயர் பிரியா பட்ஜெட்டைத் தாக்கல் செய்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்தபோது, அவையில் எதிர்பாராத பரபரப்பு ஏற்பட்டது.
பட்ஜெட் உரையின் போது, மணலி மண்டலக் குழுத் தலைவர் ஆறுமுகத்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அமர்ந்திருந்த அவருக்கு திடிரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதைக் கண்டு அருகில் இருந்த கவுன்சிலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் சக உறுப்பினர்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர். அதனைத் தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதன் காரணமாக கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும், நீண்ட நேரம் அமர்ந்திருந்ததால் ஏற்பட்ட சோர்வு அல்லது உணவு ஒவ்வாமை காரணமாக இந்த மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam