அரிசியை இலவசமாக கொடுக்கும் அரசு 10 குவாட்டர்களை இலவசமாக கொடுக்குமா? - சீமான் கேள்வி
திருச்சி, 18 பிப்ரவரி (ஹி.ச.) திருச்சியில் வரும் 21-ந் தேதி (சனிக்கிழமை) நாம் தமிழர் கட்சி சார்பில் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு 2026 நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் களம் காணப்போகும் நாம் தமிழர் கட்
அரிசியை இலவசமாக கொடுக்கும் அரசு 10 குவாட்டர்களை இலவசமாக கொடுக்குமா?  - சீமான் கேள்வி


திருச்சி, 18 பிப்ரவரி (ஹி.ச.)

திருச்சியில் வரும் 21-ந் தேதி (சனிக்கிழமை) நாம் தமிழர் கட்சி சார்பில் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு 2026 நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் களம் காணப்போகும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட இருக்கின்றனர்.

இந்த சூழலில், திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (பிப்ரவரி 18) மாநாட்டு ஏற்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டார்.

ஆய்விற்கு பின்னர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வரும் 21ம் தேதி நடைபெறும் நாம் தமிழர் கட்சி மாநாடு தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும். மக்கள் அரசியலில் மாற்றத்தை விரும்புகிறார்கள். சுற்றுச்சூழல் பாதிப்பு மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. மாற்றம் என்பது சொல் அல்ல. செயல். தேர்தல் பிரசாரத்தை நாம் தமிழர் கட்சி தொடங்கிவிட்டது.

வேட்பாளரை மொத்தமாக அறிவித்துவிட்டு, தேர்தல் பிரசாரத்தை முழுவீச்சில் தொடங்குவோம். நாங்கள் விரும்புவது ஆட்சி முறை மாற்றம். இந்த ஆட்சி முறை அரசியலை எதிர்க்கிறோம். தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் கடன் வாங்கி நிறைவேற்றப்பட்டவை. கடன் பெற்று திட்டத்தை அரசு நிறைவேற்றுகிறது. அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் தரமில்லை. எல்லாம் இலவசமாக கொடுக்கிறார்கள். அறிவை வளர்க்கும் ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் வீதியில் நிற்கிறார்கள். நெசவாளிகள் வீதியில் நிற்கிறான்.

நீங்கள் குவாட்டர் இலவசம் என்று கடையில் விற்பனை செய்வீர்களா? பண்டிகைக்கு 10 குவாட்டர் இலவசம் என்று அரசு சொல்கிறதா? விசாயிகள் கஷ்டப்பட்டு விளைவிக்கும் அரிசியை மட்டும் இலவசம் என்று ஏன் இந்த அரசு அறிவிக்கிறது. பொங்கலுக்கு நெசவாளர்கள் கஷ்டப்பட்டு தயார் செய்யும் வேஷ்டி, சேலைகளை இலவசமாக கொடுக்கும் அரசு, 10 குவாட்டர்களை இலவசமாக கொடுக்குமா? இலவசமாக ஏதை கொடுக்க வேண்டும் என்று இருக்கிறது. அறிவு, மருத்துவத்தை உலக தரத்திற்கு கொடுங்கள்.

அமைச்சர்கள், பார்லிமென்ட் எம்பிக்கள், சட்டசபை எம்எல்ஏக்களில் யாருடைய பிள்ளை அரசு கல்லூரிகளில் படிக்கிறது? ஏன் படிக்கவில்லை என்றால் தரமில்லை. ஆயிரம் ரூபாய் கொடுங்கள், தேர்தல் வரும் போது திடீரென 5 ஆயிரம் ரூபாய் கொடுங்கள்.

கோடை நேரம் வரும் கை செலவுக்கு காசு இருக்காது, 2 ஆயிரம் ரூபாய் போட்டு கொடுங்கள் என்று நாங்கள் கேட்கவில்லை. இவ்வளவு நிதி நிலை பற்றாக்குறையை வைத்து கொண்டு இலவசமாக கொடுப்பதா?

இவ்வாறு சீமான் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b