Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 பிப்ரவரி (ஹி.ச)
ஆட்சியில் திமுக பங்கை அளித்தே தீர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், கே.எஸ். அழகிரி உள்ளிட்டோர் பொதுவெளியில் திமுக மீது கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இதற்கு திமுக அமைச்சர்கள் ரகுபதி, ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் கடுமையான பதிலடி அளித்து வருவது இரு கட்சிகளின் தொண்டர்களிடையே மனக்கசப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஆட்சியில் பங்கு குறித்து கட்சியில் இருக்கும் தனிநபர்கள் யாராவது கருத்துச் சொன்னால், அது அவர்களின் சொந்தக் கருத்துகளே தவிர, அதற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் நேற்று தெரிவித்தார்.
இந்த சலசப்புகளுக்கு இடையே சட்டப்பேரவையில் இன்று (பிப்ரவரி 18) கேள்வி நேரத்தின்போது தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில்,
நெடுஞ்சாலைத் துறை அமைச்சருக்கு ஒரு வேண்டுகோள். தொழிற்சாலைகள் நிறைந்த திருப்பெரும்புதூர் தொகுதியில் பல சாலைகள் பழுதடைந்துள்ளது.
நீங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி என்பது தமிழ்நாட்டு மக்களால் முடிவு செய்யப்பட்டது.
இருந்தபோதிலும், தேர்தலுக்கு முன்னதாக பழுதடைந்த சாலைகள் சரிசெய்யப்படுமா? எனக் கேட்க விரும்புகிறேன், என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, செல்வப்பெருந்தகையின் கோரிக்கை நியாயமானவை. எந்தெந்த சாலைகள் என்று முறைப்படி கடிதம் அளித்தால் நடவடிக்கை எடுக்கிறோம்.
தேர்தல் தேதி அறிவித்து விட்டால், அடுத்த நிதியாண்டில் செய்து கொடுக்கிறோம், என்றார்.
Hindusthan Samachar / vidya.b