Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 பிப்ரவரி (ஹி.ச.)
2026 - 2027ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை நேற்று (17.02.2026) காலை 09:30 மணிக்கு கூடியது.
அப்போது இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து வேளாண் இடைக்கால பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றினார்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்த விவாதம் பேரவையில் இன்று தொடங்கியது. இதன்படி இன்று (18-02-2026) முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் மறைவு குறித்து சட்டசபையில் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டது.
பின்னர். மராட்டிய மாநில முன்னாள் துணை முதல்-மந்திரி அஜித் பவார், மூத்த கல்வியாளர் ராசகோபாலன் ஆகியோரின் மறைவு குறித்த இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து சட்டசபையில் வாசித்தளிக்கப்பட்ட 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் மற்றும் இடைக்கால வேளாண்மை பட்ஜெட் ஆகியவற்றின் மீதான எம்.எல்.ஏ.க்களின் பொது விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அப்போது தி.மு.க.வின் போராட்டமே 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கு காரணம் என்று சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்நிலையில் 7.5 சதவீத ஒதுக்கீட்டை நாங்கள் தான் கொண்டும் வந்தோம் என்று கூறி அ.தி.மு.க. உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதற்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
விளம்பரம் தேடும் செயலில் மட்டும் தமிழக அரசு ஈடுபடுகிறது. நாங்கள் செய்ததைகூட சொல்லி விளம்பரம் தேடிக்கொண்டது இல்லை. தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சியை சேர்த்துதான் 11.19 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு யாரும் கேட்காமல் மருத்துவபடிப்பில் 7.5 சதவீத ஒதுக்கீட்டை அ.தி.மு.க. வழங்கியது. அ.தி.மு.க.வின் 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கு தி.மு.க. சொந்தம் கொண்டாடுவதா..? 7.5 சதவீத ஒதுக்கீடு குறித்து தி.மு.க. எப்போதாவது பேசியது உண்டா..? ஏதாவது ஆதாரத்தை காட்டுங்கள். உண்மைக்கு புறம்பான தகவல்கள் பேசப்படுகின்றன.
நீட் தேர்வு வாக்குறுதியில் நீங்கள் ஏதாவது சாதித்தது உண்டா..? நீர் தேர்வு விலக்கு வாக்குறுதியில் நீங்கள் இன்று வரை ஒன்றும் செய்ததில்லை. மா.சுப்பிரமணியன் எதை கூறினாலும் தவறாகத்தான் கூறுகிறார். உண்மைக்கு மாறான கருத்தை அமைச்சர் கூறியதால்தான் இவ்வளவு பிரச்சினை. மாணவர்களுக்கு படிக்கும்போது மடிக்கணினி கொடுக்காமல்.. படித்து முடித்த பின் கொடுத்து ஏன்..?
இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் என்னை மிரட்டக்கூடாது. நான் அஞ்சமாட்டேன். அ.தி.மு.க. உறுப்பினர்கள் இருக்கைக்கு செல்லுங்கள்.
இல்லாவிட்டால் நடவடிக்கை எடுப்பேன் என்று என்று சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை விடுத்தார்.
Hindusthan Samachar / vidya.b