Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 18 பிப்ரவரி (ஹி.ச.)
ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கிக் கொண்டு தென்காசி மாவட்டத்தில் விற்பனை செய்வதற்காக ஒரு நபர் வந்து கொண்டிருப்பதாக தென்காசி மாவட்ட தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை கூண்டோடு பிடிக்க போலீசார் திட்டமிட்டனர்.
இந்த நிலையில், கஞ்சா பொட்டலங்களை வாங்கிக் கொண்டு தென்காசி நோக்கி வந்து கொண்டிருந்த லாரியை பின் தொடர்ந்து போலீசார் சென்று கொண்டிருந்த நிலையில், லாரியானது குத்துக்கல்வலசையில் இருந்து கணக்கப்பிள்ளை வலசை செல்லும் சாலையில் ஓரமாக நின்றதாக கூறப்படுகிறது.
உடனடியாக, போலீசார் அந்த பகுதியில் மறைந்திருந்து நோட்டமிட்டு கொண்டிருந்த நிலையில், கஞ்சா பொட்டலங்களை ஒடிசாவில் இருந்து கடத்தி தென்காசிக்கு கொண்டு வந்த நெட்டூர் பகுதியை சேர்ந்த இசக்கிகுமார் என்ற நபரிடமிருந்து 4 நபர்கள் கஞ்சா பொட்டலங்களை வாங்கிக் கொண்டு செல்ல முயற்சி செய்த நிலையில், அங்கு மறைந்திருந்த போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்துள்ளனர்.
தொடர்ந்து, அவர்களை தென்காசி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போது, இசக்கி குமாரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்க வந்த நபர்கள் அம்பாசமுத்திரம் பகுதி சேர்ந்த நயினார் விக்னேஷ், நெட்டூர் பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து, அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த ராஜாராம், அய்யனார்குளம் பகுதியை சேர்ந்த மனோரஞ்சித் என்பது தெரிய வந்த நிலையில், இவர்கள் 4 பேரும் இசக்கிகுமாரிடமிருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி சென்று அவர்களது பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு கஞ்சாவை விற்பனை செய்வதற்காக திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரிய வந்த நிலையில், அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மற்றும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு லாரி, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவைகளை போலீசார் பறிமுதல் செய்து இந்த சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சாவை ஒடிசாவில் இருந்து கடத்தி வந்து, விற்பனை செய்ய பங்கு போட்டுக் கொண்டிருந்த கஞ்சா கடத்தல் கும்பல் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN