ஏற்காடு பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரிக்கை
சேலம், 18 பிப்ரவரி (ஹி.ச.) சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே குண்டும் குழியுமாக உள்ள சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்காட்டிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் டேங்க்புதூர் என்ற கிராமம் அமைந்துள்ளது.
Yercaud People


சேலம், 18 பிப்ரவரி (ஹி.ச.)

சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே குண்டும் குழியுமாக உள்ள சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்காட்டிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் டேங்க்புதூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆனால், கிராமத்துக்குச் செல்லும் சாலை கடந்த ஒரு கிலோமீட்டர் தூரம் முழுவதும் மண்சாலையாகவும், பல இடங்களில் குண்டும் குழியுமாகவும் காணப்படுவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

மழைக்காலங்களில் சாலை மேலும் சேதமடைந்து சேறும் சதுப்புமாக மாறிவிடுகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் கூட பாதுகாப்பாக செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. அவசர தேவைகளுக்காக நகரப்பகுதிக்கு செல்ல வேண்டிய சூழலில், மக்கள் மிகுந்த அச்சத்துடன் பயணம் மேற்கொள்கின்றனர். குறிப்பாக பள்ளி மாணவர்கள் தினமும் இந்த சாலையை கடந்து செல்ல வேண்டியிருப்பதால், பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த பகுதி காட்டுப்பகுதிக்கு அருகில் இருப்பதால் காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக கிராம மக்கள் கூறுகின்றனர். சாலை வசதி சரிவர இல்லாததால், இரவு நேரங்களில் பயணம் செய்வது மிகவும் ஆபத்தானதாக மாறியுள்ளது. வயது முதிர்ந்தோர் மற்றும் சிறுவர்கள் அதிக சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

அதிலும் அவசர மருத்துவ தேவைகள் ஏற்பட்டால், உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட கிராமத்துக்குள் நுழைய சிரமம் அனுபவிக்கின்றன என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலை நீடித்தால் பெரிய விபத்துகள் அல்லது உயிர் சேதங்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர்கள் எச்சரிக்கின்றனர்.

எனவே, டேங்க்புதூர் கிராமத்துக்குச் செல்லும் இந்த சாலையை உடனடியாக சீரமைத்து, தார்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN