Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 19 பிப்ரவரி (ஹி.ச.)
தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாநில மைய நிர்வாகிகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருடன் 18.02.26 அன்று நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நடைபெற்று வந்த போராட்டத்தை சங்கத்தினர் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர்.
நேற்று நடைபெற்ற அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் முக்கிய கோரிக்கைகளை அரசு நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளது.
அங்கன்வாடி ஊழியர்களுக்கு 12 மாதங்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும்.
தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுபவர்களுக்கு முறைப்படி பிழைப்பூதியம் வழங்கப்படும்.
ஆண்டுக்கு வழங்கப்படக்கூடிய 12 நாட்கள் தற்செயல் விடுப்பில், 10 நாட்களை மொத்தமாக எடுத்துக் கொள்வதற்கான அரசாணை வெளியிடப்படும்.
அங்கன்வாடி மையங்களுக்குத் தேவையான மூன்று மாதத்திற்கான முன்பணத் தொகை முன்கூட்டியே வழங்கப்படும்.
ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் மருத்துவக் காப்பீடு வசதி விரிவுபடுத்தப்படும்.
ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்.
மேற்கண்ட கோரிக்கைகள் மற்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஓய்வூதியம் ஆகியவற்றுக்கான அரசாணைகள் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெளியிடப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தையின் போது முன்வைக்கப்பட்ட மற்ற முக்கிய கோரிக்கைகள் குறித்து அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
16 நாட்கள் போராட்டக் காலத்திற்கான ஊதிய பிடித்தமோ அல்லது பழிவாங்கும் நடவடிக்கையோ எடுக்கக்கூடாது என சங்கம் வலியுறுத்தியது. இது குறித்து சங்கத்தின் சார்பில் கடிதம் அளித்த பின் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் மற்றும் முதல்வரின் வாக்குறுதியான 313-ஐ நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்கு, அனைவரிடமும் கலந்து பேசிவிட்டு முடிவை அறிவிப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) வழங்குவது குறித்து எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கோரிக்கைகள் பலவற்றிற்குத் தீர்வு காணப்பட்டுள்ளதால், போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக மாநிலத் தலைவர் வி. ருக்மணி, பொதுச்செயலாளர் டி. டெய்சி மற்றும் பொருளாளர் எஸ். ஹேமபிரியா ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam