Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 பிப்ரவரி (ஹி.ச)
சென்னை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, பேசிய அவர்,
திமுகவினர் நீட் ஒழிப்பு தான் முதல் கையெழுத்து என கடந்த முறை ஆட்சிப் பொறுப்பு ஏற்ற போது கூறினார்கள். நீட்டை ஒழிக்க முடியாது என்பது அவர்களுக்கு தெரியும், அது நீதிமன்றத்தின் உத்தரவு. இருப்பினும், அதை கூறி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தனர்.
நீட் தேர்வை ஒழிப்பதற்காக ஒரு கோடி மாணவர்களிடம் கையெழுத்துக்களை வாங்கி குடியரசு தலைவரிடம் கொடுக்கப் போகிறோம் எனக் கூறினார்கள்.
அதற்கு மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினார்கள். நீட் விவகாரம் தங்கள் ஆளுமைக்குள் இல்லை என தெரிந்தும் பொய் சொல்லி தான் ஆட்சிக்கு வந்தார்கள். முதல் கையெழுத்து போட போகிறேன் எனக் கூறியவர்கள், ஆட்சியின் கடைசி கையெழுத்து போட்டுக் கொண்டிருக்கும் வேளையிலும் நீட் ஒழிப்பு என பொய் தான் கூறிக் கொண்டிருக்கின்றனர்.
நான்கு வருடங்களாக ’சிங்காரச் சென்னை’ திட்டம் ஆரம்பத்தில் தான் உள்ளது எனக் கூறுகிறார்கள். ஆட்சியே முடியப் போகிறது, ஆனால் அவர்கள் தொடங்கிய திட்டங்கள் முடிவடையாமல் உள்ளன. அங்கன்வாடி பணியாளர்கள் மட்டுமல்ல, நான் வந்து கொண்டிருந்த வழியிலும், இடைநிலை ஆசிரியர்களும் வெயிலில் சாலையில் போராடி கொண்டிருந்தனர்.
அவர்களிடம் பேசும் போது சம்பளம், பணி நிரந்தரம் போன்றவை திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது தான். அதை தான் கேட்கிறோம், ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. இவ்வளவு குறைபாடுகளை வைத்துக் கொண்டு மீண்டும் என்ன தேர்தல் அறிக்கை தயார் செய்யப் போகிறார்கள். தமிழ்நாட்டில் யார் போராடுகிறார்கள் என கேட்கக் கூடாது, யார் தான் போராடவில்லை என்று தான் கேட்க வேண்டும் என்றார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு பட்ஜெட் மூலம் கற்றுக் கொள்ள வேண்டும் என செல்வப்பொருந்தகை கூறியது குறித்து கேட்ட போது,
நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு பட்ஜெட் மூலம் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை, தேசத்தையே மாற்றிக் கொண்டிருக்கும் பட்ஜெட் மத்திய பட்ஜெட் எனக் கூறினார்.
Hindusthan Samachar / ANANDHAN