Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 பிப்ரவரி (ஹி.ச.)
வருகின்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தேமுதிக எந்தப் பக்கம் என்று நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் முதன் முறையாக திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது.
சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று (பிப்ரவரி 19) காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் சந்திப்பு நிகழ்த்தினர்.
இந்த சந்திப்பின் போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் சேகர்பாபு உள்ளிட்டோர், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் இருந்தனர்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது!
சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத் தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன்.
கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்!
திராவிட மாடல் ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம்!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b