போலி தடையில்லா சான்று வழங்கி சென்னையில் 72 பெட்ரோல் பங்க்-கள் அமைக்கப்பட்டது தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை
சென்னை, 19 பிப்ரவரி (ஹி.ச.) போலி தடையில்லா சான்று வழங்கி சென்னையில் 72 பெட்ரோல் பங்க்-கள் அமைக்கப்பட்டது. தொடர்பான மோசடி குறித்து சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெட்ரோல் பங்க் அமைப்பதற்கு காவல்துறை தரப்பில் இர
Petrol


சென்னை, 19 பிப்ரவரி (ஹி.ச.)

போலி தடையில்லா சான்று வழங்கி சென்னையில் 72 பெட்ரோல் பங்க்-கள் அமைக்கப்பட்டது.

தொடர்பான மோசடி குறித்து சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெட்ரோல் பங்க் அமைப்பதற்கு காவல்துறை தரப்பில் இருந்து தடையில்லா சான்று பெறவேண்டும், இந்த தடையில்லா சான்றுகளை போலியாக தயாரித்து கொடுத்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பல இடங்களில் புதிய பெட்ரோல் பங்க் அமைக்க எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து உரிமம் பெறப்பட்டுள்ளதாகக் கூறி, வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், இந்த மோசடி குறித்து உயர்நீதிமன்ற உத்தரவின்படி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சான்றிதழ் வாங்கிக் கொடுத்த 4 பேர் மீது மட்டும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளதாகவும், ஆனால், இந்த மோசடியில் முக்கிய பங்கு வகித்தவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி தரப்பில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு நேர்மையான முறையில் விசாரணை நடந்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் மனுதாரரான வி.பி.ஆர்.மேனன், சென்னையில் மட்டுமே போலியான தடையில்லா சான்று மூலமாக 72 இடங்களில் பங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மோசடியில் உண்மையான குற்றவாளிகளை போலீஸார் காப்பாற்றும் நோக்கில் செயல்படுவதாக தெரிவித்தார்.

இதையடுத்து, பெட்ரோல் பங்குகள் அமைக்க போலியாக தடையில்லா சான்று பெற்று மோசடி செய்த விவகாரத்தில் சிபிசிஐடி போலீஸார் முழுமையாக விசாரிக்கவில்லை.

சென்னையில் மட்டுமே 72-க்கும் மேற்பட்ட மோசடிகள் நடந்துள்ளதாக மனுதாரர் ஆதாரப்பூர்வமாக குற்றம் சாட்டியுள்ளதாகக் கூறிய நீதிபதிகள், சென்னையில் உள்ள வழக்குகளின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டனர்.

திண்டுக்கல் மற்றும் ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் குற்றத்தில் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளதால், அந்த இடங்களில் நடந்த மோசடி தொடர்பாக சிபிசிஐடி போலீசாரே விசாரணை நடத்தலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவி்ட்டுள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ