Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 பிப்ரவரி (ஹி.ச.)
தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் பங்க்கள் தொடங்க காவல் துறை தடையில்லா சான்று வழங்க வேண்டும். இந்த தடையில்லா சான்றுகளை போலியாக தயாரித்து கொடுத்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் புதிதாக பெட்ரோல் பங்க்கள் அமைக்க உரிமம் பெறபட்டுள்ளது.
மிகப் பெரிய அளவில் நடைபெற்றுள்ள இந்த மோசடி குறித்து ஏற்கெனவே உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி சிபிசிஐடி காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. ஆனால், விசாரணை முறையாக நடைபெறவில்லை.
போலியாக தடையில்லா சான்றிதழ் வாங்கி கொடுத்ததாக 4 பேர் மீது மட்டும் சிபிசிஐடி காவல் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்த மோசடியில் முக்கிய பங்கு வகித்த காவல் துறை மற்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த மோசடி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என வழக்கறிஞர் வி.பி.ஆர். மேனன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எம்.எம் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சிபிசிஐடி காவல் துறை தரப்பில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு நேர்மையான முறையில் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் மனுதாரரான வி.பி.ஆர். மேனன் அதற்கு ஆட்சேபம் தெரிவித்து, சென்னையில் மட்டுமே போலியான தடையில்லா சான்று மூலமாக 72 இடங்களில் பங்க்-கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மோசடியில் உண்மையான குற்றவாளிகளை காவல் துறை காப்பாற்றும் நோக்கில் செயல்படுவதாக வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பெட்ரோல் பங்க்கள் அமைக்க போலியாக தடையில்லா சான்று பெற்று மோசடி செய்த விவகாரத்தில் சிபிசிஐடி போலீஸார் முழுமையாக விசாரிக்கவில்லை.
சென்னையில் மட்டுமே
72-க்கும் மேற்பட்ட மோசடிகள் நடந்துள்ளதாக ஆதாரப்பூர்வமாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுகிறோம்.
மேலும், திண்டுக்கல் மற்றும் ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை சரியாக அடையாளம் கண்டு சிபிசிஐடி நடவடிக்கை எடுத்துள்ளதால், அந்த இடங்களில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையே தொடர்ந்து விசாரணை நடத்தலாம் என உத்தரவிட்டனர்.
Hindusthan Samachar / ANANDHAN