Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 19 பிப்ரவரி (ஹி.ச.)
தமிழ்நாடு வக்பு வாரியத்துக்கு தலைவர் உட்பட 10 பேரையும் நியமனம் செய்து கடந்தாண்டு நவம்பர் 28-ம் தேதி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்தும் மத்திய அரசின் ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை சட்டத்தை முறையாக பின்பற்றாமல் வாரிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறி வழக்கறிஞர் சவுகத் அலி முகமது என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் கடந்த ஜனவரி 9ம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சட்ட விதிகளின்படி வக்பு வாரியத்தில் மொத்தம் உள்ள உறுப்பினர்களின் 2 பேர் முஸ்லிம் அல்லாதவர்கள் இருக்க வேண்டும் , மேலும் மாநில பார் கவுன்சிலில் இருந்து ஒரு உறுப்பினர் நியமிக்கப்பட வேண்டும் என விதிகள் உள்ளன
ஆனால் அதனை பின்பற்றவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
*இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு வக்பு வாரியம் மேல்முறையீடு செய்தது*
அந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஏற்கனவே தமிழ்நாடு வக்பு வாரியத்தில் உரிய சட்ட விதிகளின்படி 8 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இன்னும் 3 பேர் நியமனம் செய்யப்பட வேண்டி உள்ளது எனவும், எனவே இதனை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட தடை விதிக்க முடியாது என வாதம் முன்வைத்தனர்.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜனவரி 9ம் தேதி பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.
மேலும் தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு நியமனம் செய்யப்பட வேண்டிய மேலும் 3 உறுப்பினர்கள் யார்? என்பதை அடுத்த விசாரணையில் தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam