சென்னை மாநில கல்லூரியில் அமைச்சர்கள் முன்னிலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட முதுகலை மாணவர்கள்
சென்னை, 19 பிப்ரவரி (ஹி.ச.) சென்னை மாநில கல்லூரியில் தமிழ் தாத்தா உ வே சாமிநாதன் அவர்களின் 172 வது பிறந்தநாளை முன்னிட்டு, கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாமிநாதன், மா சுப்பிரமணியன் துணை மேயர் மகேஷ்கு
Presidency


சென்னை, 19 பிப்ரவரி (ஹி.ச.)

சென்னை மாநில கல்லூரியில் தமிழ் தாத்தா உ வே சாமிநாதன் அவர்களின் 172 வது பிறந்தநாளை முன்னிட்டு, கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாமிநாதன், மா சுப்பிரமணியன் துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

அமைச்சர்கள் வாகனம் கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்த போது மாநில கல்லூரி முதுகலை மாணவர் ஒருவர் திடீர் என்று சாலையில் அமர்ந்து தர்ணா செய்தார்.

அவரை தொடர்ந்து சில மாணவர்களும் அவருடன் அமர்ந்தனர்.

முதுகலை மாணவர்களாகிய தங்களுக்கு அரசு வழங்கும் இலவச லேப்டாப் வழங்கவில்லை என குற்றம்சாட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2021-ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு முடித்து, 2022-ல் இளங்கலைப் படிப்பில் சேர்ந்த மாணவர்கள், தற்போது முதுகலை முதலாமாண்டு படித்து வருகின்றனர்.

பள்ளிக்காலத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய மடிக்கணினிகள் கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்களுக்கு வந்து சேரவில்லை என்பது மாணவர்களின் முக்கிய புகாராக உள்ளது.

2021-ல் 12-ஆம் வகுப்பு முடித்தபோது கிடைக்க வேண்டிய மடிக்கணினி இதுவரை வழங்கப்படவில்லை. தற்போது முதுகலை முதலாமாண்டு வரை வந்த பிறகும், தங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

இதனால் கல்லூரி நுழைவாயிலில் அமைச்சர்கள் முன்னிலையிலேயே அமர்ந்து மாணவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அமைச்சர்கள் மரியாதை செலுத்திவிட்டு வெளியே வந்தபோது, மாணவர்கள் தர்ணாவில் ஈடுபடுவதைப் பார்த்தும், அவர்கள் என்ன காரணத்திற்காக அமர்ந்திருக்கிறார்கள் என்று கூட விசாரிக்காமல் சென்றது அங்கு குழுமியிருந்த மாணவர்களிடையே கடும் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நாங்கள் பல ஆண்டுகளாக இந்த லேப்டாப் கிடைக்குமா என்று காத்திருக்கிறோம். தற்போது உயர்கல்வி படித்து வரும் சூழலில் அது எங்களுக்கு மிகவும் தேவைப்படுகிறது. ஆனால் எங்களுக்கு வழங்காதது வருத்தமளிக்கிறது, என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.இந்தச் சம்பவத்தால் கல்லூரி வளாகத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Hindusthan Samachar / P YUVARAJ