Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 19 பிப்ரவரி (ஹி.ச.)
கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் காந்திபுரம் சிக்னலில் சந்திரயான் மற்றும் ரோவர் மாதிரி சிலைகளை இஸ்ரோ முன்னாள் தலைவரும் சந்திரயான் திட்ட இயக்குநருமான மயில்சாமி அண்ணாதுரை இன்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மயில்சாமி அண்ணாதுரை,
கோவையில் காந்திபுரம் மிகவும் முக்கியமான இடம் நாம் இங்கு நிற்பதற்கு மாவட்ட ஆட்சியரும் மாநகராட்சி ஆணையாளரும் மிகப்பெரிய உதவி புரிந்து உள்ளார்கள்.
சந்திரயான் மாதிரி இங்கு வைக்கப்பட்டுள்ளது என்பது நாம் அடுத்த கட்ட அறிவியலில் எந்த அளவுக்கு சென்றிருக்கிறோம் என்பதை காட்டுகிறது.
நான் இந்த காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து தான் பெங்களூர் சென்றேன் தற்பொழுது இதே காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சந்திரயான் மாதிரியை திறந்து வைத்துள்ளேன் இது மிகவும் பெருமையாக உள்ளது.
மேலும் கோவையில் இருந்தும் சந்திரயானுக்கு உபகரணங்கள் எடுத்துச் செல்லப்பட்டது எனக்கு தெரியும்.
இந்தியாவிலேயே முதல்முறையாக கல்வி நிறுவனங்கள், இஸ்ரோ அனைத்தையும் தாண்டி பொது இடத்தில் இது போன்று சந்திரயானை மாதிரியை அமைத்தது இதுதான் முதல் முறை.
இது சிறுவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஊக்கமாக இருக்கும் அறிவியலில் கோவை மாவட்டம் நல்லிடத்தில் உள்ளது இது மென்மேலும் உயர்வதற்கு உந்துதலை கொடுக்கும்.
இதில் தமிழ் எழுத்துக்கள் இல்லையே என்ற கேள்விக்கு,
சந்திரயானை அப்படியே வடிவமைத்துள்ளார்கள் அதனால் தான் என பதிலளித்தார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு செயற்கைக்கோள் விஞ்ஞானம் பற்றி பல்வேறு விஷயங்களை அரசு செய்துள்ளது, அரசு பள்ளி மாணவர்களும் செயற்கைக்கோளை வடிவமைத்து அது ஏவப்பட்டு பல்வேறு தரவுகளை எடுத்துள்ளோம் என்றார்.
தற்பொழுது அடுத்த கட்டமாக பல்வேறு புத்தாக்க நிலையங்களை (stem lab) கொண்டு வந்துள்ளோம், அதில் விண்வெளி துறையையும் இணைப்பதற்கான வாய்ப்புகள் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் விரைவில் அது நடைபெறும் என்றார்.
மத்திய பட்ஜெட்டில் விண்வெளித் துறைக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மிகவும் தேவையான ஒன்றுதான், என்றும் விவசாயம் முதல் விண்வெளி வரை இந்தியா முன்னேற வேண்டிய அவசியம் உள்ளது குலசேகரப்பட்டினம் அடுத்தக்கட்ட மையனாக வரப்போகிறது.
தமிழகத்தில் விண்வெளி பூங்கா என்பது காட்சிக்காக மட்டுமல்லாமல் அங்கு அனைத்தையும் செய்ய முடியும் சிறு உபகரணங்கள் முதல் ராக்கெட்டுகள் வரை அங்கேயே ஏவ முடியும் என்ற நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் அதற்காக இந்த நிதி உபயோகப்படுத்தப்படும் என்றார்.
Hindusthan Samachar / ANANDHAN