Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 பிப்ரவரி (ஹி.ச.)
திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையில்(LPF), மாநகர போக்குவரத்து கழக ஊழியர் முன்னேற்ற சங்கம் இணைந்து செயல்பட்டு வருகிறது.
இதில் 2022 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை தலைவராக மோகன் குமார், பொதுச்செயலாளராக சரவணகுமார், பொருளாளராக சீனிவாசன் ஆகியோர் பொறுப்பு வகித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், இடைக்கால நிர்வாகிகளாக திமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த பெரம்பூர் ஆறுமுகம் உள்ளிட்ட நபர்கள் இருந்து வந்துள்ளனர்.
LPF நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறாததால் இடைக்கால நிர்வாகிகளுக்கும் - முன்னாள் நிர்வாகிகளுக்கும் இடையே சில தினங்களுக்கு முன் பல்லவன் இல்லத்தில் வைத்து தகராறு எழுந்து பல்லவன் இல்லத்திலிருந்து சங்க கட்டடத்தை பூட்டு போட்டுவிட்டு சென்றனர்.
இதனையடுத்து திமுகவைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் இரு தரப்பையும் சமரசம் செய்து தேர்தல் நடத்தும் வரை 2022 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை நிர்வாகம் செய்த பழைய நிர்வாகிகளே தற்காலிகமாக தங்களது பொறுப்புகளை தொடரலாம் என தெரிவித்ததன் அடிப்படையில் நேற்று மாலை பழைய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொள்வதற்காக அலுவலகத்தில் பூட்டி இருந்த பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.
இதனால், பழைய நிர்வாகிகளும் (தற்காலிக புதிய நிர்வாகிகள்) இடைக்கால நிர்வாகிகளும் மாறி மாறி நேற்று மாலை தாக்குதலில் ஈடுபட்டனர்.
மேலும், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீதும் இடைக்கால நிர்வாகிகளான பெரம்பூர் ஆறுமுகம் தரப்பினர் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இடைக்கால நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோரை திருவல்லிக்கேணி போலீசார் நேற்று மாலை கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
இந்த நிலையில், பெரம்பூர் ஆறுமுகம் உள்ளிட்ட 100 நபர்கள் மீது திருவல்லிக்கேணி போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சட்ட விரோதமாக கூடுதல், அரசு அதிகாரியின் உத்தரவை மீறுதல், சென்னை மாநகர காவல் சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ