எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக கழகம் - புதிய கட்சி தொடங்குவதாக முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவிப்பு
சென்னை, 19 பிப்ரவரி (ஹி.ச.) தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த பரபரப்புகளுக்
எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக கழகம் - புதிய கட்சி தொடங்குவதாக  முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவிப்பு


சென்னை, 19 பிப்ரவரி (ஹி.ச.)

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் பண்ருட்டி ராமச்சந்திரன் புதிய அரசியல் கட்சியைத் தொடங்க இருப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு வருகிறார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது,

என்னுடைய அரசியல் அறிவு மற்றும் அனுபவத்தைப் பயன்படுத்த வேண்டும் என நச்சரித்து இந்த அரசியல் இயக்கத்தைத் தொடங்க வைத்துள்ளார்கள்.

எல்லோருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும். பிறப்பைக் கொண்டு புறக்கணிக்கக் கூடாது என்கிற நோக்கத்தோடு திறமை பெற்றிருக்கும் அனைவருக்கும் வாய்ப்பு பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவது இந்த அரசியல் இயக்கத்தின் குறிக்கோளாகும்.

பிறப்பின் காரணமாக ஏற்பட்டிருக்கின்ற இந்த சூழ்நிலையை அறவே மறந்து, பிறந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் திறமைக்கேற்ற வாய்ப்பை சமுதாயம் பெற வேண்டும். அப்பொழுதுதான் அந்த சமுதாயம் அமைதியாகவும் முன்னேற்றமும் கொண்டதாகவும் இருக்கும்.

அறிஞர் அண்ணா என்னை அரசியலுக்கு அழைத்தார்; எம்ஜிஆர் என்னை அரசியலில் வளர்த்தார். அவர்கள் கற்றுத்தந்த பாடங்கள் அடிப்படையில் எல்லோரும் இன்புற்று வாழ்வதற்கு ஏற்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கவும் வேண்டிய வரலாற்று கட்டாயம் இன்று ஏற்பட்டிருக்கிறது. அந்த கடமையை செய்வதற்கு தான் அரசியலே தவிர வேறல்ல. தேர்தலில் நின்று வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பது என்னுடைய நோக்கம் அல்ல.

இந்த இயக்கம் தேர்தலில் ஈடுபடாது. இந்த இயக்கம் நல்ல சமுதாயத்தை உருவாக்க ஒரு அரசியல் நெடும் பயணத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு தரும். எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக கழகம் என்ற இயக்கத்தை தொடங்குகிறேன்.வரும் 23 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் கட்சியின் அறிமுக விழா நடைபெறும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அண்ணாவால் அரசியலுக்கு வந்த பண்ருட்டி ராமச்சந்திரன் பண்ருட்டி ராமச்சந்திரன் முதலில் திமுகவில் தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார். 1967ல் திமுக எம்எல்ஏ ஆன நிலையில் 1971ல் மீண்டும் பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பின்னர் 1977ல் அதிமுகவில் இணைந்த பண்ருட்டி ராமச்சந்திரன் அங்கிருந்து பாமகவுக்குச் சென்றார். பின்னர் மக்கள் நலவுரிமைக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கிய நிலையில் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது தனது கட்சியை கலைத்துவிட்டு தேமுதிகவில் இணைந்தார்.

தொடர்ந்து மீண்டும் அதிமுகவில் இணைந்த அவர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா ஆதரவாளராகவும் பின்னர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராகவும் இருந்துள்ளார். தற்போது தேர்தல் நெருங்குவதையொட்டி கூட்டணி குறித்து ஓபிஎஸ் முடிவெடுக்காததாலும் ஓபிஎஸ் அணியின் செயல்பாடுகளில் கருத்து வேறுபாடு உள்ளதாலும் புதிய கட்சி தொடங்கவுள்ளதாக பண்ருட்டி ராமச்சந்திரன் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது அவரது 88 வயதில் 'எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b