தரம் குறைந்த தங்க நகைகளை விற்க முயற்சி செய்த சம்பவம் - நகைக்கடை உரிமையாளரை கடுமையாக தாக்கிய கும்பல்
தென்காசி, 19 பிப்ரவரி (ஹி.ச.) தென்காசி மாவட்டம், தென்காசி நகரப் பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷத். இவர் தென்காசி நகரின் மையப் பகுதியில் உள்ள அம்மன் சன்னதி பஜாரில் ஏ.ஆர் என்கின்ற நகைக்கடை ஒன்றை நடத்தி வரும் நிலையில், இவரிடம் சில மாதங்களுக்கு முன்பு அதே சன்
நகை கொள்ளை


தென்காசி, 19 பிப்ரவரி (ஹி.ச.)

தென்காசி மாவட்டம், தென்காசி நகரப் பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷத். இவர் தென்காசி நகரின் மையப் பகுதியில் உள்ள அம்மன் சன்னதி பஜாரில் ஏ.ஆர் என்கின்ற நகைக்கடை ஒன்றை நடத்தி வரும் நிலையில், இவரிடம் சில மாதங்களுக்கு முன்பு அதே சன்னதி பஜாரில் ஆயிஷா கோல்ட் என்கின்ற நகைக்கடை நடத்தி வரும் உரிமையாளரான காலிப் என்பவர் பேசி பழகி தனக்குத் தெரிந்த ஒரு நபரின் 56 கிராம் நகையானது ரூ.3.5 லட்சத்திற்கு அடமானத்தில் உள்ளதாகவும், அந்த நகையை அடகில் இருந்து திருப்ப நீங்கள் பணம் கொடுத்தால், அவர் அந்த நகையை உங்களிடமே விற்பனை செய்வார் என கூறியுள்ளார்.

இந்த நிலையில், ஹர்ஷத் தன்னிடம் இருந்த ரூ3.5 லட்சம் பணத்தை ஆயிஷா கோல்டு உரிமையாளரான காலிப்பிடம் கொடுத்து அந்த நகையை திருப்பிய நிலையில், அந்த நகையானது டச்சு குறைந்த நகையாக இருந்துள்ளது.

அதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஹர்ஷத் இது தரம் குறைந்த தங்கம் எனவும், இது எனக்கு வேண்டாம் தன்னுடைய பணத்தை திருப்பி தாருங்கள் என கூறியுள்ளார்.

ஆனால், பணத்தை திருப்பி தராமல் காலிப் ஏமாற்றி வந்த நிலையில், இது தொடர்பாக ஹர்ஷத் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இந்த நிலையில், நேற்று இரவு ஹர்சத்தை, காலிப் உள்பட சில நபர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்து கடுமையாக தாக்கிய நிலையில், தற்போது அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹர்சத்தை தாக்கிய காலிப் மற்றும் அவரது சகோதரர்களான அஸ்லம், ஹாஜி உள்ளிட்ட 4 நபர்களை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / GOKILA arumugam