'தி கேரளா ஸ்டோரி-2' டிரெய்லர் - பினராயி விஜயன் கடும் கண்டனம்
கேரளா, 19 பிப்ரவரி (ஹி.ச.) சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான படம் ''தி கேரளா ஸ்டோரி'' கேரளாவில் 32,000 இந்துப் பெண்கள் முஸ்லிம் மதத்துக்கு மத மாற்றம் செய்யப்பட்டு, பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாக இந்த படம் சித்தரி
பினராயி விஜயன்


கேரளா, 19 பிப்ரவரி (ஹி.ச.)

சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான படம் 'தி கேரளா ஸ்டோரி' கேரளாவில் 32,000 இந்துப் பெண்கள் முஸ்லிம் மதத்துக்கு மத மாற்றம் செய்யப்பட்டு, பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாக இந்த படம் சித்தரித்தது.

இத்திரைப்படம் வெளியான சமயத்தில் நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.

தொடர்ந்து மத்திய அரசு வழங்கும் 2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில் 2 தேசிய விருதுகள் இப்படத்துக்கு வழங்கப்பட்டதும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இந்நிலையில் 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் 2 ஆம் பாகம் உருவாகி உள்ளது.

இதன் டிரெய்லர் நேற்று வெளியானது.

விபுல் அம்ருத்லால் ஷா தயாரிக்க, கமக்யா நாராயண் சிங் இந்த இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். முதல் பாகத்தினைப் போலவே டிரெய்லரில் சர்ச்சை வசனங்கள் மற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்து பெண்களை இஸ்லாமிய மதத்துக்கு மாற்றுவதும், கட்டாயப்படுத்தி மாட்டுக்கறி சாப்பிட வைப்பதும் இதில் சித்தரிக்கப்பட்டுள்ளது. பலரும் இதற்கு கண்டன்ம் தெரிவித்து வருகின்றனர். அதிலும் மத வெறுப்பை தூண்டும் வகையிலான இந்த டிரெய்லரை கண்டித்து வருகின்றனர்.

இந்நிலையில் 'தி கேரளா ஸ்டோரி 2' படத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

வெறுப்பைத் தூண்டும் 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் தொடர்ச்சியான பாகம் குறித்து மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். முதல் பாகத்தின் வகுப்புவாத நிகழ்ச்சி நிரல் மற்றும் அப்பட்டமான பொய்களை ஏற்கனவே பார்த்த கேரளா, நமது மதச்சார்பற்ற கட்டமைப்பை அவமதிப்புடன் சித்தரிக்கும் இந்த முயற்சியை மீண்டும் நிராகரிக்கும்.

வகுப்புவாத மோதலைத் தூண்டும் நோக்கில் புனையப்பட்ட கதைகள் எவ்வாறு தாராளமாக அனுமதிக்கப்படுகின்றன, அதே நேரத்தில் கலை விமர்சன வெளிப்பாடுகள் எவ்வாறு வாயடைக்கப்படுகிறது என்பது அதிர்ச்சி அளிக்கிறது

நமது அமைதியாக நல்லிணக்கமான நிலத்தை பயங்கரவாதத்தின் மையமாக சித்தரிக்க முயலும் இந்த முயற்சிகளுக்கு எதிராக நாம் ஒற்றுமையாக நிற்க வேண்டும். வாய்மையே வெல்லும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam