Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 19 பிப்ரவரி (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டத்தில் முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆவணி மற்றும் மாசித் திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். அந்தவகையில், மாசித்திருவிழா (பிப்ரவரி 10) அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நடைபெற்ற ஒன்பது நாள்களும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பூஞ்சப்பரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித் திருவிழா பத்தாம் நாள் தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
தேரோட்டத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.
அதன்பின்னர் காலை 7.30 மணியளவில் சர்வ அலங்காரத்துடன் அம்மன் தேரில் எழுந்தருளி நான்குரத வீதிகள் வழியாக வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முருகப்பெருமான்- வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் எழுந்தருளிய பெரிய தேரை திருக்கோயில் இணை ஆணையர் ராமு, உதவி ஆணையர் மெய்வேல், மண்டல தணிக்கை அலுவலர் இன்பமணி, தலைமை கணக்கர் அம்பலவாணன், பணியாளர்கள் மாரிமுத்து, ஆறுமுகராஜ், நெல்லையப்பன், கோயில் பாதுகாவலர்கள் மற்றும் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
பாதுகாப்பு பணியில் டிஎஸ்பி மகேஷ்குமார் தலைமையில் கோயில் இன்ஸ்பெக்டர் கனகராஜன், எஸ்ஐக்கள் சுப்பிரமணியன், பாஸ்கர் உள்ளிட்ட போலீசார் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b