திமுக,தேமுதிக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவது உறுதி - பிரேமலதா விஜயகாந்த்
சென்னை, 19 பிப்ரவரி (ஹி.ச) தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல்
திமுக,தேமுதிக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவது உறுதி -  பிரேமலதா விஜயகாந்த்


சென்னை, 19 பிப்ரவரி (ஹி.ச)

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சு வார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி குறித்து எதுவும் தெரிவிக்காமல் இருந்த நிலையில் தற்போது திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது.

இந் நிலையில் இன்று காலை அண்ணா அறிவாலயத்திற்கு வந்த பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே.சுதீஷை அமைச்சர் எ.வ.வேலு, கே.என்.நேரு உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், திமுக கூட்டணியில் இணைத்துக் கொண்டார்.

இந்த சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, சேகர்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர். கட்சி ஆரம்பித்ததில் இருந்து முதல் முறையாக தேமுதிக திமுவுடன் கூட்டணி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில்,

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்ற கேள்வி நீண்ட நாட்களாக நிலவி வந்தது. அதன்படி, இன்று திமுகவுடன் தேமுதிக கூட்டணியை உறுதி செய்துள்ளோம்.

தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் விரும்பிய படி திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.

தேமுதிக முதன்முறையாக திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. 2016-லேயே இந்தக் கூட்டணி அமைந்திருக்க வேண்டும்.

பழம் நழுவி பாலில் விழும் என்று கருணாநிதி கூறியிருந்தார். ஆனால், அது இப்போது கேப்டன் இல்லாத போது தாமதமாக நடந்துள்ளது.

மற்றபடி இந்தத் தேர்தலில் தேமுதிக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் போன்றவை எல்லாம் அண்ணன் ஸ்டாலின் அறிவிப்பார். இதற்காக ஒரு குழு அமைக்கப்படும். அந்தக் குழு திமுகவுடன் ஆலோசனை செய்த பின்னர் முறைப்படி அறிவிப்பு வெளியாகும்.

இந்தக் கூட்டணி தேமுதிகவினர், பொது மக்களும் வரவேற்கும் கூட்டணியாக உள்ளது.

200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவது உறுதி.

ராஜ்யசபா எம்.பி. சீட் குறித்து எல்லாம் அண்ணன் ஸ்டாலின் உரிய நேரத்தில் அறிவிப்பார்.

இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b