Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 19 பிப்ரவரி (ஹி.ச.)
சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் மிகவும் பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்த திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 22ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
இந்த கும்பாபிஷேக விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று முதல் இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றுத் தொடர்ந்து கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
விழாவின் முதல் நாளான இன்று தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.
சேலம் செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதர் திருக்கோயிலிருந்து துவங்கிய இந்த தீர்த்தக்குட ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் பல்வேறு புண்ணிய நதியிலிருந்து எடுத்துவரப்பட்ட தண்ணீரைத் தீர்த்தக் குடமாக எடுத்து வந்தனர்.
தாரை, தப்பட்டை, மேளதாளங்கள் முழங்கக் குதிரை பசு மாடுகள் அணிவகுத்துச் செல்ல ஊர்வலம் நடைபெற்றது. செவ்வாய்பேட்டையில் பல்வேறு வீதிகள் வழியாகச் சென்ற ஊர்வலம் இறுதியில் கோயிலை அடைந்தது தொடர்ந்து அம்மனுக்கு எடுத்துவரப்பட்ட தீர்த்த கலசங்கள் யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட உள்ளது.
ஊர்வலத்தையொட்டி சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் போலீஸார் பலத்த பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாட்டினை விழாக் குழுவினர் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b