Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 பிப்ரவரி (ஹி.ச.)
இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் 22 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 மீனவர்கள் மற்றும் அவர்களது மூன்று மீன்பிடிப் படகுகளுடன் கைது செய்யப்பட்டதையும், அதே நாளில் நடந்த மற்றொரு சம்பவத்தில், ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீனவ சமூகத்தின் வாழ்க்கையும் வாழ்வாதாரமும் கடலையே நம்பியுள்ளதால் இலங்கை அதிகாரிகளால் மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவது அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நிலவரப்படி 104 மீனவர்களும் 258 படகுகளும் இலங்கை காவலில் உள்ளது.
மேலும், பிப்ரவரி முதல் வாரத்தில் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட 12 மீனவர்கள் தாயகம் திரும்புவதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவது, அவர்களின் குடும்பங்களை நிச்சயமற்ற சூழலிலும் பொருளாதார நெருக்கடியிலும் ஆழ்த்தியுள்ளது.
எனவே, இலங்கை காவலிலிருந்து விடுவிக்கப்பட்ட அனைத்து மீனவர்களும் தாயகம் திரும்புவதற்கும், தற்போது கைது செய்யப்பட்டு அங்கு காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கும் உடனடி தூதரக நடவடிக்கைகளை எடுக்கவும் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b