தவெக பிரச்சார வாகனத்தில் நடிகர் அஜித்குமாரின் புகைப்படம் - சிடிஆர் நிர்மல்குமார் விளக்கம்
சென்னை, 19 பிப்ரவரி (ஹி.ச.) சென்னையை அடுத்த பல்லாவரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பிரச்சார வாகனத்தை அக்கட்சியின் இணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் தொடங்கி வைத்தார். இதையடுத்து அங்கிருந்த செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசினார். அ
CTR Nirmal Kumar


சென்னை, 19 பிப்ரவரி (ஹி.ச.)

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பிரச்சார வாகனத்தை அக்கட்சியின் இணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து அங்கிருந்த செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,

திமுக, அதிமுக போன்ற திராவிட கட்சிகள் பல்லாயிரம் கோடி ரூபாய் பண பலத்துடன் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. ஆனால், தவெக தலைவர் விஜய், பணபலத்தை நம்பாமல் மக்கள் பலத்தை மட்டுமே நம்பி களமிறங்கியுள்ளார்.

ஊழலற்ற நேர்மையான அரசு நிர்வாகத்தை தருவேன் என்ற வாக்குறுதியை எங்கள் தலைவர் விஜய் கொடுத்திருக்கிறார். அந்த வாக்குறுதியை ஏற்று, அனைத்துத் தரப்பு மக்களும் தாமாக முன் வந்து தவெகவுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

சுதந்திரப் போராட்டத்திற்குப் பின் காங்கிரஸ் பெற்ற வெற்றியைப் போல, 2026 தேர்தலில் மக்கள் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போகிறார்கள். அது உறுதியாகிவிட்டது. ஒரு தொகுதிக்கு 25 கோடி ரூபாய் வரை செலவு செய்ய பிற கட்சிகள் தயாராக இருக்கும் சூழலில், எளிய தொண்டர்களைக் கொண்டு நேர்மையான முறையில் மாற்றத்தை உருவாக்க நாங்கள் முயல்கிறோம்.

மற்ற கட்சிகளின் கூட்டங்களில் 'விசில்' அடிப்பதால் தலைவர்கள் எரிச்சல் அடைந்து வருவதை தினமும் பார்க்க முடிகறது. தவெகவிற்கு மக்கள் கொடுக்கும் ஆதரவை கண்டு தான் அவர்களுக்கு இந்த எரிச்சல் வருகிறது. இது பயத்தின் வெளிப்பாடு.

இன்றைய சூழலில் 40 சதவீதம் வாக்கு வங்கி தவெகவுக்கு உள்ளது. இதுவே அவர்களின் அச்சத்திற்கு காரணம் என நிர்மல் குமார் தெரிவித்தார்.

தொடர்ந்து, தவெக தேர்தல் பிரச்சார வாகனத்தில் நடிகர் அஜித்குமாரின் புகைப்படம் பயன்படுத்தப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த நிர்மல் குமார், அது தனிப்பட்ட நிர்வாகி ஒருவரின் விருப்பம்.

அவர் தீவிர அஜித் ரசிகராக இருந்ததால், அவரது புகைப்படத்தை பயன்படுத்துவதற்கு மூன்று வாரங்களுக்கும் மேலாக அனுமதி கேட்டார். அதன் அடிப்படையிலேயே இதற்கு ஒப்புக் கொண்டோம். பொதுமக்களும், தொண்டர்களும், நிர்வாகிகளும் தங்களுக்குப் பிடித்தமான முறையில் தவெகவுக்கு பிரச்சாரம் செய்யலாம் என்றார்.

கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தேர்தல் நெருங்கும் இறுதி நாட்களில் பல மாற்றங்கள் நிகழலாம். தலைவர் சரியான நேரத்தில் கூட்டணி முடிவுகளை அறிவிப்பார். பிப்ரவரி 23-ம் தேதி வேலூரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காவல் துறையின் அனுமதி கிடைக்கும் இடத்தில் இந்தக் கூட்டம் சிறப்பாக நடைபெறும். தமிழகம் முழுவதும் தவெக அலை வீசி வருகிறது.

தேர்தல் நாளன்று காலை 5 மணிக்கே மக்கள் வரிசையில் நின்று தவெகவுக்கு வாக்களித்து ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்துவார்கள் என அவர் கூறினார்.

Hindusthan Samachar / ANANDHAN