விழுப்புரம் மாவட்டத்திற்கு வரும் 21 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை- மாவட்ட ஆட்சியர் உத்தரவு
விழுப்புரம், 19 பிப்ரவரி (ஹி.ச.) விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் சிவபெருமான், பார்வதி தேவி ஆகியோருக்கு சாப விமோசனம் வழங்கிய ஸ்தலமாகவும், பில்லி, சூனியம், ஏவல் போன்றவைக
Villupuram Collector


விழுப்புரம், 19 பிப்ரவரி (ஹி.ச.)

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் சிவபெருமான், பார்வதி தேவி ஆகியோருக்கு சாப விமோசனம் வழங்கிய ஸ்தலமாகவும், பில்லி, சூனியம், ஏவல் போன்றவைகளை அழிக்கும் ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. இக்கோயிலில் அங்காளம்மன் புற்று வடிவில் சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

மாதந்தோறும் அமாவசை தினத்தன்று நள்ளிரவில் நடைபெறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் ஊஞ்சல் உற்சவ விழாவில் உக்ரத்துடன் இருக்கும் அங்காளம்மனை ஊஞ்சலில் அமர வைத்து பாட்டு பாடி தாலாட்டும் வைபவம் பிரசித்தி பெற்றவையாகும்.

இப்படி பல்வேறு சிறப்புகளை பெற்று விளங்கி வரும் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆண்டுத்தோறும் மாசி மாதத்தில் பிரம்மோற்சவ திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டு மாசி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 27ஆம் தேதி வரை 13 நாட்கள் நடைபெற உள்ள இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அங்காளம்மன் தேர் திருவிழா வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர் திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அங்காளம்மனை தரிசனம் செய்வார்கள் என்பதால் தேர் திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற உள்ள மாசி தேர் திருவிழாவையொட்டி வரும் 21ஆம் தேதியன்று விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி வரும் 21ஆம் தேதி சனிக்கிழமையன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் இயங்காது என்றும் அதே சமயம் அன்றைய தினம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இருந்தால் அந்த தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவித்துள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN