Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 பிப்ரவரி (ஹி.ச)
சென்னை கொளத்தூர் அன்னை அஞ்சுகம் நகர் மூன்றாவது குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபாரதி 34. இவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
கடந்த ஆறாம் தேதி இரவு 10 மணியளவில் வீட்டிற்கு வந்து தனது இருசக்கர வாகனத்தை வீட்டின வெளியே நிறுத்திவிட்டு மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது தனது இரு சக்கர வாகனம் காணாமல் போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஜெயபாரதி கொளத்தூர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
கொளத்தூர் குற்றப்பிரிவு போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் இரண்டு பேர் இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு செல்வது தெரிய வந்தது. இதனை யடுத்து தொடர்ந்து அடுத்தடுத்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கொளத்தூர் போலீசார் ராமாபுரம் கொத்தாரி ஒன்பதாவது தெருவை சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் நெசப்பாக்கம் இந்திரா காந்தி நகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என இரண்டு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இவர்கள் இரண்டு பேரும் சம்பவத்தன்று கொளத்தூர் பகுதிக்கு வந்து இரு சக்கர வாகனத்தை திருடி சென்றது தெரியவந்தது.
மேலும் இவர்கள் கொரட்டூர். மாங்காடு. உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆறு இருசக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது. இதனை யடுத்து இவர்களிடமிருந்து மூன்று இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் இவர்கள் திருடும் இரு சக்கர வாகனங்களை திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா தச்சம்பாடி பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் 19 என்ற நபரிடம் இவர்கள் விற்பனை செய்து வந்துள்ளனர்.
ஜெகதீஷ் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் வேலை செய்து வருகிறார். விபத்தில் சிக்கும் அல்லது பழுதாகி இருக்கும் இருசக்கர வாகனங்களை பார்த்து அந்த வண்டியின் ஆர் சி புக் வைத்துக்கொண்டு அதேபோன்று வண்டி வேண்டும் என சிறுவர்களிடம் கேட்டு சிறுவர்கள் அந்த வண்டி மாடலை வைத்துக்கொண்டு அதேபோன்று வண்டிகளை திருடித் தரும் போது பழுதாகி நிற்கும் ஆர்சிபுக் எண்களை திருட்டு வண்டியில் பதிவிட்டு அதனை பழைய வண்டி விற்பனைக்கு வந்துள்ளது என்று கூறி நல்ல விலையில் தனது ஊரில் ஜெகதீஷ் விற்பனை செய்து வந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சென்ற கொளத்தூர் குற்றப்பிரிவு போலீசார் ஜெகதீஷை கைது செய்து அவரிடமிருந்து மேலும் மூன்று இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து சிறுவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு கொளத்தூர் போலீசார் அனுப்பி வைத்தனர்.
மேலும் ஜெகதீஷ் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Hindusthan Samachar / P YUVARAJ