மெரினாவில் ரோப் கார் திட்டம் வெறும் அறிவிப்பு மட்டும்தானா? - மண்டல குழு தலைவர் மூர்த்தி கேள்வி
சென்னை, 20 பிப்ரவரி (ஹி.ச.) சர்வதேச சுற்றுலாத்தலமான மெரினா கடற்கரையை அழகுபடுத்தவும் சுற்றுலா துறையை மேம்படுத்தும் விதமாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது, அதன் ஒரு பகுதியாக மெரினா கடற்கரையில் ரோப் கார் சேவை தொடங்க வேண்டும் என்று பல
Marina


சென்னை, 20 பிப்ரவரி (ஹி.ச.)

சர்வதேச சுற்றுலாத்தலமான மெரினா கடற்கரையை அழகுபடுத்தவும் சுற்றுலா துறையை மேம்படுத்தும் விதமாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது,

அதன் ஒரு பகுதியாக மெரினா கடற்கரையில் ரோப் கார் சேவை தொடங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்,

இது தொடர்பாக மாநகராட்சியில் பல ஆண்டுகளுக்கு முன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும் திட்டம் இன்னமும் அமலுக்கு வராமலேயே உள்ளது.

இந்த நிலையில் மெரினா கடற்கரை லைட் ஹவுஸ் முதல் அண்ணா சதுக்கம் வரை ரோப் கார் திட்டம் அமல்படுத்தப்படும் என 2026-2027க்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக இன்று நடந்த பட்ஜெட் விவாதத்தின் போது, பேசிய அம்பத்தூர் மண்டல குழு தலைவர் மூர்த்தி, மெரினாவில் ரோப் கார் சேவை வேண்டும் என்று தொடர்ச்சியாக மாமண்ட உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் திட்டம் கொண்டுவரப்படும் என பட்ஜெட்டில் அறிவித்திருந்தது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது,

ஆனால் திட்டத்திற்கு நிதி எதுவும் ஒதுக்கப்படாமல் உள்ளதால் மீண்டும் வெறும் அறிவிப்பு மட்டும்தான்.? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மேயர் பிரியா, சாத்திய கூறுகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதின் அடிப்படையிலேயே ரோப் கார் சேவை அமல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக வரும் நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN