Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 பிப்ரவரி (ஹி.ச)
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (20.02.2026) சென்னை, அடையாறு குமார ராஜா முத்தையா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் 654 அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.41.85 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பபட்டுள்ள 654 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களை திறந்து வைத்து பார்வையிட்டார்.
பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் மற்றும் திட்டமிடல் போன்ற செயல்முறைகளை மேம்படுத்துவதற்கு (ICT) ஐசிடி தொழில்நுட்பம் ஒரு முக்கிய ஊக்கியாக உள்ளதைக் கருத்தில் கொண்டு, அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ரூ.519.73 கோடி மதிப்பீட்டில் 8,209 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களும், அரசு தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ரூ. 455.32 கோடி மதிப்பீட்டில் 22,931 திறன்மிகு வகுப்பறைகளும் வெற்றிகரமாக நிறுவப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டில் உள்ளன.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பெறும் நன்மைகளை, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் வழங்கும் நோக்கில், முதற்கட்டமாக 654 அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 9 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.41.85 கோடி மதிப்பீட்டில் 654 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இந்த உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் ஆசிரியர்களை வழிகாட்டிகளாகக் கொண்டு மாணவர்களின் கற்றல் திறன், பிரச்சினை தீர்க்கும் திறன் மற்றும் டிஜிட்டல் திறன்கள் ஆகியவற்றை மேம்படுத்தப் பெரிதும் துணைபுரியும்.
இவ்விழாவில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி, பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், பெற்றோர் ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் பி.வி.பி.முத்துக்குமார், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில கூடுதல் திட்ட இயக்குநர் எஸ்.உமா, இணை இயக்குநர்கள் வை.குமார், ஆனந்தி, சென்னை முதன்மைக் கல்வி அலுவலர் கபிர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / vidya.b