Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 பிப்ரவரி (ஹி.ச)
போக்குவரத்து கழகங்களில் நிலுவையில் இருந்த ஓய்வூதியப் பலன்களை வழங்கக் கோரி தொழிலாளர் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன. இதை பரிசீலித்த அரசு, தற்போது நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஓய்வூதியப் பலன்கள் மற்றும் இதர நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்கும் வகையில், 2,446 கோடி ரூபாய் சிறப்பு நிதியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதன்படி, 2024ம் ஆண்டு முதல் 2026ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பணி ஓய்வு பெற்றவர்கள், இந்த குறிப்பிட்ட ஆண்டுகளில் விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்கள், மாநிலம் முழுவதும் மொத்தம் 6,867 பணியாளர்கள் இந்த தொகையை நேரடியாகப் பெறுவார்கள்.
ஓய்வு பெற்ற பணியாளர்களுக்குச் சேர வேண்டிய முக்கியமான மூன்று பலன்களுக்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பணியாளர்களின் சேமிப்புத் தொகை, நீண்ட காலப் பணிக்காக வழங்கப்படும் மொத்தத் தொகை, பயன்படுத்தப்படாத விடுப்பு நாட்களுக்கான ஊதியம் ஆகியவற்றிற்கு நிதி வழங்கப்படவுள்ளது.
இந்த 2,446 கோடி ரூபாய் நிதியானது தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கியப் போக்குவரத்துப் பிரிவுகளுக்கும் பிரித்து வழங்கப்பட உள்ளது.
குறிப்பாக, மாநகர போக்குவரத்து கழகம் (எம்டிசி - சென்னை), அரசு விரைவு போக்குவரத்து கழகம் (எஸ்இடிசி) விழுப்புரம், கும்பகோணம், மதுரை, கோவை உள்ளிட்ட அனைத்து மண்டலப் போக்குவரத்து கோட்டங்கள் ஆகிய போக்குவரத்து பிரிவுகளுக்கு பிரித்து வழங்கப்படவுள்ளது.
Hindusthan Samachar / vidya.b