மகாராஷ்டிராவில், இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை இரத்து செய்தது ஏன்? - த.வா.க வேல்முருகன் கேள்வி
சென்னை, 20 பிப்ரவரி (ஹி.ச) மகாராஷ்டிராவில், இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை இரத்து செய்தது இந்திய அரசியலமைப்பின் சமூகநீதி நோக்கத்தையும், சமநிலையையும் பாதிக்கும் அபாயகரமானது என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எக்ஸ் தளத்தில் அறிக்கை
Velmurugan


He


சென்னை, 20 பிப்ரவரி (ஹி.ச)

மகாராஷ்டிராவில், இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை இரத்து செய்தது இந்திய அரசியலமைப்பின் சமூகநீதி நோக்கத்தையும், சமநிலையையும் பாதிக்கும் அபாயகரமானது என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

மகாராஷ்டிரா மாநிலத்தில் சமூகம் மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய இஸ்லாமியச் சமூகப் பிரிவுகளுக்கான 5% இடஒதுக்கீட்டை இரத்து செய்திருப்பது நிர்வாக நடவடிக்கை என்ற எல்லையை மீறி, இந்திய அரசியலமைப்பின் சமூகநீதி நோக்கத்தையும், கூட்டாட்சி தத்துவத்தின் சமநிலையையும் பாதிக்கும் அபாயகரமானதாகும்.

மாநிலங்கள் தங்களின் சமூக அமைப்பு மற்றும் வரலாற்றுப் பின்னடைவை ஆய்வு செய்து நலன் சார்ந்த கொள்கைகளை வடிவமைக்கும் அதிகாரமே கூட்டாட்சியின் அடித்தளம். அந்த அதிகாரத்தைப் பலவீனப்படுத்தும் இந்த முடிவு, மாநில அரசுகளின் அதிகாரங்களைச் சுருக்கும் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.

இடஒதுக்கீடு என்பது மத அடிப்படையிலான சலுகை அல்ல. பல தலைமுறைகளாகக் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பின் தங்கிய சமூகங்களுக்கு, சம வாய்ப்பை உருவாக்க அரசியலமைப்பு வழங்கிய சமத்துவ நடைமுறை ஆகும்.

அப்படியான வாய்ப்பை அகற்றுவது, கல்விக்கதவுகளை அடைக்கும் செயலே ஆகும் . கல்வி மறுக்கப்பட்டால் வேலை வாய்ப்பு குறையும், வேலை வாய்ப்பு குறைந்தால் பொருளாதார முன்னேற்றம் தடைபடும், அதன் விளைவாகச் சமூக நம்பிக்கை சிதையும்.

ஏற்கனவே உள்ள சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய நிலையில், மத அடையாளங்களை அரசியலாக்கும் பாதையைத் தேர்ந்தெடுக்கும் பாசிச பாஜக அரசியல், மக்களுக்கிடையிலான ஒற்றுமையையும் சகோதரத்துவ உணர்வையும் பாதிக்கும் ஆபத்தான நிலையைத் திட்டமிட்டு உருவாக்குகிறது.

இத்தகைய முன்னுதாரணம் பிற மாநிலங்களிலும் நடைமுறைக்கு வந்தால் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கான பாதுகாப்பு ஒதுக்கீடுகள், அரசியல் காரணங்களால் குறைந்துவிடும் பேராபத்தானது.

இது மாநிலங்களின் அதிகாரத்தையும் ஜனநாயகச் சமநிலையையும் சீர்குலைக்கும்.

மாநில உரிமைகள் குறையும்போது கூட்டாட்சி தளர்ந்துவிடும். கூட்டாட்சித் தளர்ந்தால் ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கைப் பாதிக்கப்படுகிறது என்பது வரலாறு உணர்த்தும் பாடமாகும்.

மக்கள் முன்னேற்றத்திற்கு உதவ வேண்டிய ஆட்சி வாய்ப்புகளைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது, ஜனநாயக ஆட்சியின் பண்பல்ல. சமூகநீதி அடிப்படைகளைப் பாதிக்கும் இந்த தீர்மானம் அரசியலமைப்பின் சமத்துவக் கொள்கைக்கு முரணானது. இதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

எனவே, மகாராஷ்டிராவில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையை இரத்து செய்ய வேண்டும் எனவும், சமூகப் பின்னடைவு அடிப்படையிலான அனைத்து பாதுகாப்பு வாய்ப்புகளையும் உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ