Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 பிப்ரவரி (ஹி.ச)
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி மேற்கொள்ளபட உள்ளது. இதன் காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களின் சேவையில் இன்று (20.02.2026) முதல் வரும் ஏப்ரல் மாதம் 05ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு மாற்றம் செய்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் 44 மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இத்தகைய இக்கட்டான சூழலில் தான் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான புறநகர் மின்சார ரயில்கள் சிக்னல் கோளாறு காரணமாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. சென்னை எழும்பூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தாம்பரத்தில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஒரே தண்டவாளத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் பணிக்குச் செல்லக்கூடிய பயணிகள் சிரமம் அடைந்துள்ளனர்.
பயணிகள் சிரமத்தை தவிர்க்க கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக,மாநகர போக்குவரத்து கழகம் இன்று காலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை தாம்பரம் செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரெயில்களின் சேவையில் வரும் பிப்ரவரி 20-ந் தேதி (இன்று) முதல் ஏப்ரல் 05 வரை 45 நாட்களுக்கு மாற்றம் செய்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என தென்னக ரெயில்வே மாநகர போக்குவரத்து கழகத்திற்கு தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பினை தொடர்ந்து மாநகர போக்குவரத்து கழகம் வரும் 20.02.2026 முதல் 05.04.2026 வரை ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து தாம்பரம், கிளாம்பாக்கம் வழியாக கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும் தடம் எண்.E18-ல் 15 பேருந்துகளும், கிளாம்பாக்கம் வரை இயக்கப்படும் தடம் எண்.18A-ல் 28 பேருந்துகள் என 44 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
மேலும் கூடுதலாக ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து 35 பேருந்துகள் கிளாம்பாக்கம் வரையும், பல்லாவரத்திலிருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரை 15 பேருந்துகள் என மொத்தம் 50 பேருந்துகள் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்பட உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b