Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 பிப்ரவரி (ஹி.ச.)
2026 - 2027ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த 17ஆம் தேதி (17.02.2026) காலை 09:30 மணிக்கு கூடியது.
அப்போது இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து வேளாண் இடைக்கால பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து இடைக்கால பட்ஜெட் குறித்த விவாதம் சட்டப் பேரவையில் நேற்று முன்தினம் (18.02.2026) தொடங்கியது. அந்த வகையில் நேற்றும், நேற்று முன்தினமும் என இரு நாட்கள் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றது.
இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டப்பேரவையில் இன்று (20.02.2026) பதிலளித்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதிலளித்தார்.
இந்த நிலையில் அதிமுக உறுப்பினர்கள் அவைக்கு வராமல் புறக்கணித்துள்ளனர். அதே போன்று பா.ம.க. தலைவர் அன்புமணி தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் அவையை புறக்கணித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவரும், அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் அக்கட்சி எம்.எல்.ஏ.களுடன் சட்டப்பேரவைக்கு வருகை தந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் ஆல் பெயில்
(ALL FAIL) என்ற அட்டையைக் காட்டி திமுக ஆட்சி தோல்வி அடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரன் கூறியதாவது,
இடைக்கால பட்ஜெட்டில் எதிர்கால திட்டங்கள் எதுவும் இல்லை. திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை அவர்களுக்கே இல்லை. திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 90% நிறைவேற்றவில்லை. துணை முதலமைச்சரை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்பதற்காக ஐந்து ஆண்டுக் கால ஆட்சியையும், சட்டமன்றத்தையும் திமுகவினர் ஒரு விளம்பரப் பலகையாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதைப் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசாங்க பணத்தையும், அரசாங்கத்தையும், சட்டமன்றத்தையும் தேர்தலுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்பதை நான் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறேன். தி.மு.க. அரசு எவ்வளவு வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது?
தி.மு.க அரசு நிறைவேற்றியுள்ள வாக்குறுதிகளின் அடிப்படையில் பா.ஜ.க சார்பில் மதிப்பெண் அளித்துள்ளோம். அதில் குறைந்த மதிப்பெண் எடுத்து திமுக அரசு தோல்வி (Fail) ஆகியுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b