செயற்கை நுண்ணறிவு மாநாடு விவகாரம் - டிடிவி தினகரன் கண்டனம்
சென்னை, 21 பிப்ரவரி (ஹி.ச) டெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு (AI) மாநாட்டில் அத்துமீறி நுழைந்து அநாகரீகமாக நடந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியினர் – இந்தியாவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் இதுபோன்ற அத்துமீறலில் இறங்கும் காங்கிர
Pasumpon TTV Dhinakaran


சென்னை, 21 பிப்ரவரி (ஹி.ச)

டெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு (AI) மாநாட்டில் அத்துமீறி நுழைந்து அநாகரீகமாக நடந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியினர் – இந்தியாவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் இதுபோன்ற அத்துமீறலில் இறங்கும் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியது என்று அமமுக பொதுச் செயலாளர் டி‌டிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு (AI) உச்சி மாநாட்டிற்குள் அத்துமீறி நுழைந்த காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியினர் சிலர் அரைகுறை ஆடையுடன் மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு எதிராக போராட்டம் எனும் பெயரில் அநாகரீகமான செயல்களில் ஈடுபட்டதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

வளர்ச்சியடைந்த இந்தியா எனும் இலக்கை நோக்கி இந்தியா முன்னெடுத்திருக்கும் இந்த மாநாட்டில் மனிதவள மேம்பாடு, சமூக மேம்பாடு, பாதுகாப்பான செயற்கை நுண்ணறிவு, அறிவியல், ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் சார்ந்த நிகழ்வுகளுக்கு இடையே காங்கிரஸ் கட்சியினர் அரங்கேற்றியிருக்கும் இந்த அநாகரீகமான செயல் கடும் கண்டனத்திற்குரியது.

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான நல்லாட்சியில் நாட்டின் பொருளாதாரம் தொடங்கி அனைத்து துறைகளும் வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணித்து வரும் நிலையில், அதற்கு நேர் மாறாக கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையைப் போல கரைந்து கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியின் இதுபோன்ற கீழ்த்தரமான செயல்கள் இந்திய நாட்டின் மீதான அக்கட்சியின் தேச விரோத எண்ணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

ஐநா சபையின் பிரதிநிதிகள் தொடங்கி பல்வேறு வளர்ந்த நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் வரை ஒன்று திரண்டு பங்கேற்ற இந்த பெருமைமிக்க மாநாட்டில், காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டு நடத்தியிருக்கும் இந்த நாடகம், செயற்கை நுண்ணறிவு மாநாட்டிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் இழுக்கை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

எனவே, உலக நாடுகளின் மத்தியில் இந்தியாவின் வளர்ச்சியையும், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சியையும் சீர்குலைக்க முயலும் காங்கிரஸ் கட்சியின் இதுபோன்ற அநாகரீகமான செயல்பாடுகள் நாட்டு மக்கள் மத்தியில் ஒருபோதும் எடுபடாது என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN