Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 21 பிப்ரவரி (ஹி.ச)
நீலகிரி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் பிளாஸ்டிக் பாக்கெட்களில் பால் வினியோகிப்பதற்கு பதிலாக மாற்று வழிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, ஆவின் நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்த கோரி வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரதசக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், அதற்குப் பதில் டெட்ரா பாக்கெட்களில் விற்பனை செய்ய துவங்கியுள்ளதாக நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு விதிக்கப்பட்ட தடை, பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்படும் டெட்ரா பாக்கெட்களுக்கும் பொருந்தும் எனவும், டெட்ரா பாக்கெட்கள், பிளாஸ்டிக் பாட்டில்களை விட அபாயகரமானவை எனவும் தெரிவித்தனர். டெட்ரா பாக்கெட்களில் பொருட்களை விற்பனை செய்வதற்கு பதில் மாற்று வழிகளை கண்டறிய வேண்டும் என ஏற்கனவே உத்தரவிட்டுள்ள நிலையில், குடிநீரை டெட்ரா பாக்கெட்களில் விற்பனை செய்ய முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், குடிநீர் டெட்ரா பாக்கெட்களை பறிமுதல் செய்து, அவற்றை விற்கும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
நீலகிரியில் ஆவின் பால் பாக்கெட்கள் மூலம் ஒரு நாளைக்கு 60 லட்சம் பிளாஸ்டிக் பாக்கெட்கள் புழக்கத்துக்கு வருவதாகவும், பாலை கண்ணாடி பாட்டில்களில் வினியோகிக்க இருப்பதாகவும், அதற்கான டெண்டர்கள் நடைமுறைகள் துவங்கியுள்ளதாகவும் கடந்த 2013ம் ஆண்டு ஆவின் நிறுவனம், உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்திருந்ததாகவும் நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், பிளாஸ்டிக் பாக்கெட்களுக்கு பதிலாக, பாலை வினியோகிக்க மாற்று வழியை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்யும்படி ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.
Hindusthan Samachar / P YUVARAJ