தமிழ்நாடு இந்தியை ஏற்காதது குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்
சென்னை, 21 பிப்ரவரி (ஹி.ச.) தமிழ் மற்றும் இந்தோ - ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பிட்டு அகராதி திட்டத்தின் நான்காம் தொகுதி வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை விக்டோரியா ஹாலில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நூலை வெ
Udhayanidhi Stalin


சென்னை, 21 பிப்ரவரி (ஹி.ச.)

தமிழ் மற்றும் இந்தோ - ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பிட்டு அகராதி திட்டத்தின் நான்காம் தொகுதி வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை விக்டோரியா ஹாலில் இன்று நடைபெற்றது.

இதில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நூலை வெளியிட்டு சிறப்பித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,

தமிழ் மற்றும் இந்து ஐரோப்பிய மொழிகளின் ஒப்பிட்டு சொற்பிறப்பியல் அகராதியின் நான்காம் தொகுதி நூலை வெளியிட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்று சர்வதேச தாய்மொழி தினம். இந்த தினத்தில் இப்படி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றதில் பெருமை அடைகிறேன்.

தந்தை பெரியாரின் முதல் மொழி போராட்டம் 1937-38 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றது. பள்ளிக் கூடங்களில் இந்தி கட்டாய மொழியாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து அந்த போராட்டம் நடைபெற்றது.

கலைஞர் தன்னுடைய 14 வது வயதில் திருவாரூரில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். இந்தி திணிப்பு என்பது அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்ட தினம் இதே பிப்ரவரி 21, 1940.

இந்தியாவில் இருக்கும் மற்ற மாநிலங்களில் இந்தி மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் தமிழ்நாடு மட்டும் ஏன் இன்னும் எதிர்க்கிறது?என்று பலரும் சந்தேகம் எழுப்புகிறார்கள்.

அவர்களுக்கெல்லாம் நான் சொல்ல விரும்பும் பதில் இது தான், மற்ற மொழிகளின் துணை இல்லாமல் தனித்து இயங்கும் ஆற்றல் தமிழ் மொழிக்கு உண்டு, அதை தான் கால்டுவெல் சொன்னார்.

தமிழ் மொழியின் சிறப்பு, தொன்மை உலகமே தெரிந்து கொள்ளும் வகையில் தற்போது இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூல்கள் எல்லாம் மிகப் பெரிய ஆய்வுக்குப் பிறகு கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழ் மொழியின் சொற்களை ஆராய்ந்து. அதன் அமைப்பு பிறப்பு, பொருள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, இந்தோ - ஐரோப்பிய மொழிகளான லத்தின், கிரீக், ஜெர்மன், பாரசீக மொழி, சமஸ்கிருத சொற்களையும் ஆய்வு செய்து மொழிகளில் இருக்கும் சொற்களை ஒப்பிட்டுப் பார்ப்பது தான் இந்த நூல். இதில் 12 தொகுதிகள் உள்ளன.

இதன் முதல் தொகுதி 2025 மார்ச் மாதத்தில் முதலமைச்சர் வெளியிட்டார். இரண்டு மற்றும் மூன்றாம் தொகுதி கடந்த புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட்டன. தற்போது நான்காவது தொகுதியை நான் வெளியிட்டுள்ளேன். மீதமுள்ள தொகுதிகளும் விரைவில் வெளியிடப்படும். தமிழ் மொழியின் பழமையை பெருமையை நிலைநாட்ட இது போன்ற ஆராய்ச்சிகள் மிக அவசியம்.

திராவிட இயக்கம் தமிழ் மொழிக்கு என்ன செய்தது? என்று பலரும் கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லும் பதில், தமிழ்நாட்டில் எப்போதும் இரு மொழிக் கொள்கை தான் இருக்கும் என்று கொண்டு வந்தது திமுக. இந்தி மொழிக்கு இங்கு இடமில்லை என்று உறுதி செய்தது திமுக. தமிழ்நாடு என்று பெயர் வைத்ததும் திமுக தான். தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்று தந்ததும் திமுக தான்.

திமுக அரசு அமைந்த பிறகு தமிழறிஞர்களின் நூல்களை முதலமைச்சர் நாட்டுடைமை ஆக்கியுள்ளார்.

முத்தமிழ் அறிஞர் மொழிபெயர்ப்பு திட்டத்தில் 160 நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. திசைதோறும் திராவிடம் திட்டத்தின் கீழ் 70 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. கனவு இல்லம் திட்டத்தின் கீழ், தமிழ் எழுத்தாளர்களுக்கு வீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழா, சென்னையில் பன்னாட்டு புத்தக திருவிழா இப்படி தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஏராளமான பணிகளை திமுக செய்து வருகிறது என்றார்.

Hindusthan Samachar / ANANDHAN