சென்னையில் வீட்டில் தனியாக வசித்து வந்த முதியவரை கத்தியால் குத்திக் கொலை செய்து தங்க நகைகள் திருடிய பீகார் இளைஞர் கைது
சென்னை, 21 பிப்ரவரி (ஹி.ச) சென்னை புரசைவாக்கம் அரசப்பா தெருவைச் சேர்ந்தவர் 61 வயது முதியவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி உஷா கடந்த 2024 ஆம் ஆண்டு இறந்து விட்டார். குழந்தை இல்லை. இதனால் தனியாக வசித்து வந்தார். மேலும் பாலகிருஷ்ணன் சென்னை அண்ணாநகரில்
Hbe


Arrest


சென்னை, 21 பிப்ரவரி (ஹி.ச)

சென்னை புரசைவாக்கம் அரசப்பா தெருவைச் சேர்ந்தவர் 61 வயது முதியவர் பாலகிருஷ்ணன்.

இவரது மனைவி உஷா கடந்த 2024 ஆம் ஆண்டு இறந்து விட்டார். குழந்தை இல்லை. இதனால் தனியாக வசித்து வந்தார். மேலும் பாலகிருஷ்ணன் சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் துணிக்கடை ஒன்றில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு பாலகிருஷ்ணனுக்கு அவரது அண்ணன் மகன் விக்னேஷ் என்பவர் போன் செய்துள்ளார். ஆனால் போனை நீண்ட நேரமாக எடுக்கவில்லை. இதனால் விக்னேஷ் நேரில் வந்தார். அப்போது பாலகிருஷ்ணனின் கதவு பூட்டு போட்ட நிலையில் இருந்தது. ஆனால் கதவின் கீழே ரத்தம் வெளியே வருவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

விக்னேஷ் ஜன்னல் வழியாக பார்க்கும்போது பாலகிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு கதறிதுடித்தார். தகவல் அறிந்து வேப்பேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பாலகிருஷ்ணனின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணை நடத்தினர். வீட்டில் இருந்த தங்க நகைகள் திருடப்பட்டு இருந்தது தெரிந்தது.

சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது இளைஞர் ஒருவர் வீட்டிற்குள் செல்வதும், பையோடு வெளியே செல்வதுமாக இருந்ததாக தெரிகிறது. விசாரணையில் பாலகிருஷ்ணன் வேலை செய்யும் துணிக்கடையில் தூய்மை பணியாளராக வேலை செய்யும் பீகாரைச் சேர்ந்த ஷாயம் மாத்தேவ் (35) என்பது தெரிந்தது. போலீசார் கடைக்கு சென்று விசாரணை நடத்தி அவர் வசிக்கும் வீட்டிற்கு சென்று கைது செய்தனர்.

திருடிய 5 சவரன் தங்க நகைகளோடு மனைவியோடு பீகாருக்கு தப்பிச் செல்ல முயன்ற போது போலீசார் வசமாக பிடித்து கைது செய்தனர். விசாரணையில், ஷாயம் வேலை செய்த போது பாலகிருஷ்ணன் பழக்கம் ஏற்பட்டது.

மேலும் பாலகிருஷ்ணனின் மனைவி இறந்த பின்னர் அவர் தனிமையில் வசித்து வருவது தெரிந்து கொண்டு ஷாயம் தினமும் அவர் வீட்டிற்கு சென்று தேவையான உதவிகளை செய்வதும் இருவரும் சேர்ந்து மது அருந்தி வந்ததும் தெரியவந்தது.

இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஷாயம் மாத்தேவ் நேற்று வழக்கம் போல் பாலகிருஷ்ணன் வீட்டிற்கு சென்று அவருடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். பின்பு பாலகிருஷ்ணனுக்கு போதை தலைக்கேறிய உடன் கத்தியால் அவரை குத்தி கொலை செய்து விட்டு வீட்டில் இருந்த 5 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து கொண்டு தப்பிச் சென்றது விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது.

மேலும் ஷாயம் கொலை செய்து பொருட்களை கொள்ளையடித்து கொண்டு நேராக தங்கியிருந்த அறைக்கு சென்று தன் பொருட்களை எடுத்து கொண்டு பீகார் தப்பி செல்ல ஆயுத்தமான நேரத்தில் போலீசார் சரியான நேரத்தில் சென்று அவரை கைது செய்து கொள்ளையடித்த பொருட்களை பறிமுதல் செய்தனர். கைதான ஷயாமிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ