Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 21 பிப்ரவரி (ஹி.ச.)
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலக வாசலில் ராகுல்காந்தி உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக இளைஞர் அணியினரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர்போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுடெல்லி பாரத மண்டபத்தில் 5 நாள் சா்வதேச ஏ.ஐ. தாக்க உச்சிமாநாடு கடந்த திங்கள்கிழமை (பிப்ரவரி 16) தொடங்கி நடைபெற்று வருகிறது.
உலகம் முழுவதும் இருந்து முன்னணி ஏ.ஐ. தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், கல்வியாளா்கள், ஆராய்ச்சியாளா்கள் என 500-க்கும் மேற்பட்ட துறைசாா் பிரதிநிதிகள், 60-க்கும் மேற்பட்ட அமைச்சா்கள்-இணையமைச்சா்கள் என 100-க்கும் மேற்பட்ட அரசு பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனா்.
இந்த மாநாட்டின் மூலம் இந்தியா தனது தொழில்நுட்ப முன்னேற்றத்தை உலகுக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின் போது இளைஞர் காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்த சிலர் அரங்கிற்குள் புகுந்து நாட்டின் மரியாதையை குலைக்கும் வகையில் மேலாடை இல்லாமல் அரை நிர்வாணமாகச் சென்று குழப்பம் ஏற்படுத்தி இருப்பதை கண்டித்து நேற்று புதுச்சேரி மாநில பாஜக இளைஞர் அணிச் செயலா் ஆடலரசன் தலைமையில் புதுச்சேரியில் காங்கிரஸ் அலுவலகம் எதிரே கண்டனப் போராட்டம் நடைபெற்றது.
முன்னதாக காமராஜா் சிலையிலிருந்து வைசியாள் வீதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்கு ஊா்வலமாக வந்தனா். அங்கு கண்டன முழக்கமிட்டனர். அப்போது, திடீரென பாஜக இளைஞர் அணியினர் சிலர் ராகுல்காந்தியின் உருவ பொம்மையை எரித்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், ராகுல் காந்தியை கண்டித்து அவரது உருவ பொம்மையை எரித்த பாஜகவினருக்கு எதிராக இன்று பாஜக அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த வந்த காங்கிரஸ் கட்சியினர் கற்கள், காலணிகளை வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். பதிலடியாக பாஜகவினரும் தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Hindusthan Samachar / vidya.b