11 ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சா வழக்கு!
தருமபுரி, 21 பிப்ரவரி (ஹி.ச.) தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பள்ளியில் பயிலும் சிறுமியை அழைத்துச் சென்று கோயிலில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 21 வயது வாலிபர் மீது போக்சோ சட்ட
Pocso Act


தருமபுரி, 21 பிப்ரவரி (ஹி.ச.)

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பள்ளியில் பயிலும் சிறுமியை அழைத்துச் சென்று கோயிலில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக 21 வயது வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவியை, அதே பகுதியைச் சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் நல்லம்பள்ளி அருகே உள்ள விநாயகர் கோயிலில் அந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறுமி காணாமல் போனது குறித்து குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் தரப்பில் சந்தேகம் எழுந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தருமபுரி மாவட்ட நிர்வாகத்திற்கும் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான சைல்டு ஹெல்ப்லைன் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் தொப்பூர் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வ புகார் பதிவு செய்யப்பட்டது. புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு, குறித்த வாலிபர் சிறுமியை திருமணம் செய்து கொண்டு தலைமறைவாகி இருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, சிறுமி குறைந்த வயதுடையவர் என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைமறைவாக உள்ள வாலிபரை கைது செய்ய தனிப்படை அமைத்து தேடுதல் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிறுமியின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN