கஞ்சா மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் - 3 பேர் கைது
கன்னியாகுமரி, 21 பிப்ரவரி (ஹி.ச.) கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின் ஐபிஎஸ் தலைமையில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு
Kanyakumari


கன்னியாகுமரி, 21 பிப்ரவரி (ஹி.ச.)

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின் ஐபிஎஸ் தலைமையில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக இருந்த நபர்களை சோதனை செய்தபோது, அரசால் தடை செய்யப்பட்ட 1 கிலோ 360 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும், கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நடவடிக்கையின் போது சாமிதோப்பு பகுதியை சேர்ந்த கணபதியின் மகன் தனுஷ் கிருஷ்ணா (22), பீச் ரோடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் மகன் விஷால் (18) மற்றும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் சவுகான் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் வாகனங்கள் தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், கஞ்சா விற்பனை அல்லது கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN