Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 21 பிப்ரவரி (ஹி.ச.)
கோவை மாவட்டம், துடியலூர் அருகே உள்ள வட்டமலைபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி பின் புறம் உள்ள புதரில் இளம்பெண்ணின் சடலம் பாதி எரிந்த நிலையில் கிடந்தது கடந்த இரண்டு நாள்களுக்கு முன் தெரியவந்தது.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் பாண்டி கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த துடியலூர் காவல் ஆய்வாளர் தவசியப்பன் தலைமையிலான போலீஸார், சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.
இதில், உயிரிழந்த பெண் செங்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த அனிதா (25) என்பதும், இவர் அங்கு காய்கறிகடை நடத்தி வருவதும் ஏற்கெனவே திருமணமான இவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஏற்கனவே திருமணம் ஆன தமிழ்செல்வன் (30) என்பவருடன் பழக்கம் இருந்து வந்ததும் தெரியவந்தது.
சம்பவத்தன்று தனியாகப் பேச வேண்டும் எனக் கூறி, அனிதாவை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு வட்டமலைபாளையம் பகுதிக்கு தமிழ்செல்வன் வந்து உள்ளார். அப்போது, அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
இதில், ஆத்திரம் அடைந்த தமிழ்செல்வன் அங்கு இருந்த கட்டையால் அனிதாவின் தலையில் தாக்கி உள்ளார். படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதை அடுத்து, கொலையை மறைக்கவும், பெண்ணின் அடையாளத்தை மாற்றவும் தனது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை எடுத்து சடலத்தில் ஊற்றி தீவைத்து விட்டு தமிழ்செல்வன் அங்கு இருந்து தப்பி உள்ளார்.
இதை அடுத்து, அனிதாவின் செல்போன் எண்ணை வைத்து துப்பு துலக்கியதில் தமிழ்செல்வன் பிடிபட்டார். இவர் தனியார் பள்ளியில் ஓட்டுநனராக பணியாற்றி வருகிறார். அவரிடம் விசாரணை நடத்தியதில் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் தமிழரசனை பிடிக்க முயற்சி செய்தபோது தப்பி ஓடியதாகவும் அப்போது கீழே விழுந்ததில் அவரின் வலது காலில் எலும்பு முறி ஏற்பட்டதாகவும். போலீசார் அவரை மருத்துவமனையில் சேர்த்து மாவு கட்டு போட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam