Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 21 பிப்ரவரி (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயில் ஆகும். இந்த திருக்கோயிலில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலம் மற்றும் பாண்டிச்சேரி போன்ற பகுதிகளில் இருந்து அதிக அளவு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வருகின்றனர்.
திருத்தணி முருகன் கோயிலில் மாசிப் பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி நேற்று மாலை அங்குரார்பணம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து இன்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. காலை 8 மணிக்கு கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. கொடி மரத்திற்கு எதிரில் சிறப்பு மலர்கள் மற்றும் மயில் இறகு மாலை அணிவிக்கப்பட்டு வள்ளி,தெய்வானை சமேதராக உற்சவர் முருகப்பெருமான் எழுந்தருளினார்.
தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற உள்ள விழாவில் தினமும் காலை, மாலை நேரங்களில் உற்சவர் வாகன சேவையில் எழுந்தருளி கோயில் மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
பிப்ரவரி வரும் 27ம் தேதி தேர்த் திருவிழா நடைபெறுகிறது. மார்ச் 1ம் தேதி அதிகாலை வள்ளி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
Hindusthan Samachar / vidya.b