திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்
தூத்துக்குடி, 21 பிப்ரவரி (ஹி.ச.) முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் வருந்தோறும் பல திருவிழாக்கள் நடைபெறும். அதில் மாசித் திருவிழா மிக முக்கிய திருவிழாவாகக் கருதப்படுகிறது. 2ஆம் படை வீட்டில் மட்டும் தான் ஆவணித் த
திருச்செந்தூா் முருகன் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்


தூத்துக்குடி, 21 பிப்ரவரி (ஹி.ச.)

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் வருந்தோறும் பல திருவிழாக்கள் நடைபெறும். அதில் மாசித் திருவிழா மிக முக்கிய திருவிழாவாகக் கருதப்படுகிறது.

2ஆம் படை வீட்டில் மட்டும் தான் ஆவணித் திருவிழா மாசித் திருவிழா என 2 பிரம்மோற்சவம் நடைபெறுகிறது, மற்ற முருகன் கோயில்களில் ஆண்டுக்கு ஒரு பிரம்மோற்சவம் மட்டுமே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

சுமார் 12 நாட்கள் நடைபெறும் இந்த மாசித் திருவிழாவில், பெரிய தேரில் சுவாமியும், தெய்வானையும் வலம் வருவதைக் காண ஏராளாமான பக்தர்கள் கலந்து கொள்வர். திருவிழா துவங்கிய அந்த 12 நாட்களும் திருச்செந்தூர் முருகன் கோயில் விழாக் கோலம் பூண்டு, களைகட்டிக் காணப்படும்.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், புகழ்மிக்க மாசித் திருவிழா இன்று (பிப்ரவரி 21) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து காலை 5 மணிக்கு கோயில் செப்புக் கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது.

இன்று மாலையில் அப்பர் சுவாமிகள் கோயிலிலிருந்து தங்க சப்பரத்தில் புறப்பட்டு திருவீதிகளில் உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சி, இரவில் ஸ்ரீ பெலி நாயகர் அஸ்திரத்தேவருடன் தந்தப் பல்லக்கில் 9 சந்திகளில் திருவீதி உலாவரும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 25 ஆம் தேதி ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு, மேலக்கோயிலில் (சிவன் கோயில்) இரவு 7.30 மணிக்கு குடைவரைவாயில் தீபாராதனை நடைபெறுகிறது.

27 ஆம் தேதி ஏழாம் திருவிழாவை முன்னிட்டு, அதிகாலை 5 மணிக்கு அருள்மிகு சண்முகபெருமானின் உருகு சட்டசேவையும், காலை 9 மணிக்கு ஆறுமுகப்பெருமான் வெட்டிவேர் சப்பரத்தில் பக்த பெருமக்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்து சேருகிறார்.

அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று, மாலை 4.30 மணிக்கு சுவாமி சிவன் அம்சத்தில் தங்கச் சப்பரத்தின் மீது சிவப்பு சாத்திய கோலத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளிக்கிறார்.

28 ஆம் தேதி எட்டாம் திருவிழாவை முன்னிட்டு, காலை 5 மணிக்கு சுவாமி பிரம்மா அம்சத்தில் பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி கோலத்தில் எழுந்தருளி திரு வீதி வலம் வந்து மேலக்கோயில் சேர்ந்ததும், அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து, காலை 10.30 மணிக்கு சுவாமி விஷ்ணு அம்சத்தில் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதியுலா வந்து திருக்கோயில் சேருகிறார்.

மாா்ச் 1ஆம் தேதி ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு, இரவு சுவாமி தங்க கைலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா நடைபெறுகிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் 2 ஆம் தேதி நடைபெறுகிறது. மார்ச் 3 ஆம் தேதி பதினொன்றாம் திருவிழாவை முன்னிட்டு இரவு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. 12 ஆம் திருவிழாவான மார்ச் 4 ஆம் தேதி திருவிழா நிறைவு பெறுகிறது.

ஏற்பாடுகளை தக்கார் ரா.அருள்முருகன், இணை ஆணையர் க.ராமு மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

பாதுகாப்புப் பணியில் கோயில் காவல் நிலைய ஆய்வாளர் கனகராஜன் தலைமையிலான காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

Hindusthan Samachar / vidya.b