மே 17 இயக்கம் சார்பில் எழும்பூர் ரயில் நிலையத்தில் இந்தியை அழிக்கும் போராட்டம்
சென்னை, 21 பிப்ரவரி (ஹி.ச.) உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு மே பதினேழு இயக்கம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருக்கும் பெயர் பலகைகளில் உள்ள இந்தியை அழிக்கும் போராட்டம் நடைபெற்றது.
May 17 Protest


சென்னை, 21 பிப்ரவரி (ஹி.ச.)

உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு மே பதினேழு இயக்கம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருக்கும் பெயர் பலகைகளில் உள்ள இந்தியை அழிக்கும் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தின் கலந்து கொண்டவர்கள், 'தமிழ்நாடு தமிழருக்கே', 'செம்மொழி தமிழக்கு நிகரான மொழியா இந்தி?', 'தமிழ்நாட்டில் ஆதிக்க இந்தி எதற்கு?', 'தீ பரவட்டும்', 'தாய்மொழிக்கு இரண்டாமிடமென்றால் குடிமக்கள் தமிழர் நிலை என்ன?' போன்ற வாசகங்கள் அடங்கிய பாதாகைகள் கையில் ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பினர்.

இந்தி வாசகம் அடங்கிய பதாகைகளை கிழித்தும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் காவலர்கள் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். இருப்பினும் தடுப்பை மீறி ரயில் நிலையம் உள்ளே செல்ல முயன்ற மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி,

இந்தி மொழி திணிப்பு போராட்டம் என்பது தமிழகத்தில் மிகவும் பழமையான ஒரு போராட்டம். 100 ஆண்டுகளைக் கடந்து போராட்டம் நடந்து வருகிறது.

தற்போது ரயில் நிலைய பெயர் பலகைகளில் தமிழ் மொழி நீக்கப்பட்டு தமிழ் பெயர்கள் புறக்கணிக்கப்பட்டு அதில் இந்தி மொழியில் எழுதி உள்ளனர். பாஜகவினரும் மோடியும் இப்படி செய்து வருகிறார்கள். ரயில் நிலையத்தில் இந்தி மொழியை முன்னிலைப்படுத்த என்ன காரணம்? என கேள்வி எழுப்பினார்.

தமிழ் இனத்தின் போராட்டம் தான் இந்தி எதிர்ப்பு போராட்டம். தமிழிசை தனது பெயரை இந்தியிசை எனவும் அண்ணாமலை தனது பெயரை இந்திமலை எனவும் மாற்றிக் கொள்ளவும்.

வடமாநிலங்களில் இது போல் இந்திக்குப் பதில் தமிழில் எழுதுவார்களா? ஒரு பாஜகவினர் சிலப்பதிகாரம் பற்றி பேசி உள்ளார்களா? சீமான் கும்பல் பெரியாரைப் பற்றி பேசுகிறார்கள். சங்கராச்சாரியைப் பற்றி பேச சொல்லுங்கள் பார்க்கலாம். இந்தி திணிப்பை சீமான் ஏன் வேடிக்கை பார்க்கிறார்? விஜயும் வேடிக்கை பார்கிறார். ஓட்டுக்காக மட்டும் தான் அவர்கள் பேசுவார்களா? இந்தி எதிர்ப்பு போராட்டத்தை விஜய் முன்னெடுத்தால் மக்கள் வருவார்கள். நாம் தமிழர் கட்சி போல் வாய்சவடால் கட்சி அல்ல நாங்கள் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய திருமுருகன் காந்தி,

ரயில்வே பட்ஜெட்டில் உத்தரப்பிரதேசத்திற்கு 19 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளனர். தமிழ்நாட்டில் ரயில்வே லாபகரமாக நடந்து வருகிறது. ஆனால், வெறும் 6 ஆயிரம் கோடி ரூபாய் தான் தந்துள்ளனர். ரயில்வே பட்ஜெட்டில் குறைவான நிதியை ஒதுக்கி தமிழ்நாட்டை மத்திய பாஜக அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

தமிழ்நாட்டின் மீது வெட்கமில்லாமல் ஒரு பொருளாதாரத் தடையை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. தமிழை நாசப்படுத்தி விட்டு இந்திய திணிப்புக்கும் வேலையை பாஜக அரசு செய்து வருகிறது. தமிழ்நாட்டில் மீண்டும் இந்திக்கு எதிரான போராட்டம் வெடிக்கும். பொதுத்துறை நிறுவனங்களில் பொறிக்கப்பட்டுள்ள இந்தி பெயர்கள் அழிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN