Enter your Email Address to subscribe to our newsletters

கொழும்பு, 21 பிப்ரவரி (ஹி.ச.)
10-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் கலந்துகொண்ட 20 அணிகள், 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்களில் மோதின. லீக் ஆட்டங்களின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின.
சூப்பர் 8 சுற்றுக்கு வந்துள்ள அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் 1-ல் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகளும், குரூப் 2-ல் இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.
இந்த தொடரில் சூப்பர் 8 சுற்று ஆட்டம் இன்று தொடங்குகிறது. கொழும்புவில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மிட்செல் சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்து அணி 6 புள்ளிகளுடன் தனது பிரிவில் (டி) 2-வது இடம் பிடித்தது. பாகிஸ்தான் அணி 6 புள்ளிகளுடன் தனது பிரிவில் (ஏ) 2-வது இடத்தை பிடித்தது.
நடப்பு தொடரில் பாகிஸ்தான் அணி பிரேமதாசா ஸ்டேடியத்தில் ஏற்கனவே 2 ஆட்டங்களில் விளையாடி இருக்கிறது. அதே நேரத்தில் நியூசிலாந்து அணி இந்த மைதானத்தில் முதல் முறையாக களம் இறங்குகிறது.
சர்வதேச 20 ஓவர் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 49 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் பாகிஸ்தான் 24 ஆட்டங்களிலும், நியூசிலாந்து 23 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன. 2 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போயின. 20 ஓவர் உலக கோப்பையில் 7 முறை சந்தித்ததில் பாகிஸ்தான் 5-2 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
கொழும்புவில் இன்று மழை பெய்யக்கூடும் என்று அங்குள்ள வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:
நியூசிலாந்து: டிம் செய்பெர்ட், பின் ஆலென், ரச்சின் ரவீந்திரா, மார்க் சாப்மேன், கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், மிட்செல் சான்ட்னெர் (கேப்டன்), ஜேம்ஸ் நீஷம், மேட் ஹென்றி, சோதி, ஜேக்கப் டப்பி.
பாகிஸ்தான்: சஹிப்சதா பர்ஹான், சைம் அயூப், சல்மான் ஆஹா (கேப்டன்), பாபர் அசாம், கவஜா நபி, ஷதப் கான், உஸ்மான் கான், முகமது நவாஸ் அல்லது பஹீம் அஷ்ரப், சல்மான் மிர்சா, உஸ்மான் தாரிக், அப்ரார் அகமது.
Hindusthan Samachar / JANAKI RAM