Enter your Email Address to subscribe to our newsletters

மயிலாடுதுறை, 21 பிப்ரவரி (ஹி.ச.)
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு போக்குவரத்து கழக பணிமனையை சேர்ந்த அரசு பேருந்தை ஓட்டுனர் செல்லப்பாண்டி இன்று பகல் 12:30 மணிக்கு சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி ஓட்டி சென்றுள்ளார். இந்த பேருந்தில் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை செல்லும் பயணிகள் பயணித்துள்ளனர்.
சீர்காழி அருகே சேந்தங்குடி ரயில்வே மேம்பாலம் இறங்கியதும், பேருந்து நிறுத்தம் ஸ்டாப் அருகே பேருந்தின் பேரிங் உடைந்து வலது பின்புறம் உள்ள 2 சக்கரங்கள் வெளிவந்தன. இதனால் பலத்த சத்தம் எழுந்தது. அதனைக் கேட்ட பயணிகள் அச்சத்துடன் அலறி கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஓட்டுனர் பேருந்தை லாபகமாக நிறுத்தினார். அதனால் விபத்து ஏற்படாமல் பயணிகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
மேம்பாலத்தில் இருந்து இறங்கும் போது சக்கரங்கள் கழன்று இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும். இதையடுத்து, பேருந்தில் இருந்த பயணிகள் இறக்கிவிடப்பட்டு மாற்று பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
பல உயிர்கள் பயணிக்கும் அரசு பேருந்துகள் அவ்வப்போது சோதனை செய்யப்படாததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. எனவே, தமிழக அரசு விபத்துகளை தடுக்க அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் கூடுதல் மெக்கானிக்கை பணியமர்த்தி சோதனைக்கு பின்பு, பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b