Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 பிப்ரவரி (ஹி.ச)
நாடு முழுவதும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சந்தேகத்திற்குரிய நபர்களை கைது செய்யும் நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்நிலையில், சமூக வலைதளங்களில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக சிலர் கருத்துக்கள் பதிவிட்டு வந்ததை டெல்லி கியூ பிரிவு போலீசார் கண்டறிந்தனர்.
அந்த நபர்கள் யாரென்று ஆய்வு செய்த போது, அவர்கள் திருப்பூரில் இருப்பது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, அவர்களை மடக்கி பிடிக்க டெல்லி கியூ பிரிவு போலீசார் திருப்பூர் வந்தனர்.
பின்னர் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்ட போலீசார் உதவியுடன் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
அதில், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் திருப்பூர் ஊத்துக்குளி, பல்லடம், திருமுருகன்பூண்டி பகுதிகளில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இன்று அதிகாலை ஊத்துக்குளி பகுதியில் 2 பேர், பல்லடத்தில் 3 பேர், திருமுருகன்பூண்டியில் ஒருவர் என 6 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அவர்கள் 6 பேரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. தொழிலாளர்கள் போர்வையில் திருப்பூர் வந்து, பனியன் நிறுவனங்களில் வேலை பார்த்துக் கொண்டே பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
ஏற்கனவே வங்கதேசத்தை சேர்ந்த சிலர், தொழிலாளர்கள் என்ற போர்வையில் போலி ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் திருப்பூருக்கு வந்து பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
திருப்பூர் போலீசார் தொடர்ந்து அதிரடி ஆய்வு நடத்தி, போலி ஆவணங்களுடன் தங்கியிருக்கும் வங்க தேசத்தினரை கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 8 செல்போன்கள் மற்றும் 16 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
டெல்லியில் செங்கோட்டை, மதத் தலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரவாத தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை இன்று தகவல் அளித்த நிலையில், திருப்பூரில் வங்க தேசத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN