Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 21 பிப்ரவரி (ஹி.ச.)
உயிருக்கு நிகரானது தான் தாய்மொழி, உணர்வுக்கு உயிரூட்டுவது தான் தாய்மொழி என தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
மொழி என்பது வெறும் தகவல் பரிமாற்றத்திற்கான கருவி மட்டுமல்ல; அது நமது வரலாறு, கலாச்சாரம் மற்றும் அடையாளத்தின் பிரதிபலிப்பு. பல மொழிகள் பேசப்படும் இவ்வுலகில், ஒரு குழந்தையின் முதல் சிரிப்பிற்கும், முதல் அழுகைக்கும் அர்த்தம் கொடுப்பது அவனது தாய்மொழிதான்.
உலகில் பேசப்படும் சுமார் 7,000 மொழிகளில், கிட்டத்தட்ட 40% மொழிகள் அழியும் நிலையில் உள்ளன. ஒரு மொழி அழிந்தால், ஒரு இனத்தின் அறிவும், கலாச்சாரமும் சேர்த்தே அழிகிறது.
ஆய்வுகளின்படி, ஒரு குழந்தை தனது ஆரம்பக் கல்வியைத் தாய்மொழியில் கற்கும்போதே அதன் கிரகிக்கும் திறனும், படைப்பாற்றலும் பல மடங்கு அதிகமாகிறது.
உலகின் மிக மூத்த மொழிகளில் ஒன்றாகவும், இன்றும் வழக்கில் இருக்கும் செம்மொழியாகவும் நமது தமிழ் திகழ்கிறது என்பதில் நாம் அனைவரும் பெருமை கொள்ளவேண்டும். நமது வேர்களைக் கொண்டாடுவோம், நம் தாய்மொழியின் இனிமையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்போம்.
அனைவருக்கும் உலக தாய்மொழி தின வாழ்த்துகள் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ