Enter your Email Address to subscribe to our newsletters

வாஷிங்டன், 21 பிப்ரவரி (ஹி.ச.)
அமெரிக்க அதிபராக கடந்த வருடம் டிரம்ப் பதவி ஏற்றார். அதன் பிறகு அந்த நாட்டின் குடியுரிமை கொள்கையில் மாற்றம், உதவித் தொகை ரத்து என நிறைய அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார்.
அவர் சொல்வதை கேட்காத உலக நாடுகள் மீது அதிக வரி விதிப்பதாக மிரட்டல் விடுத்த அவர், சீனா, கனடா, மெக்சிகோ, இந்தியா உட்பட சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது கடுமையான வரிகளை விதித்தார்.
இந்த வரி விதிப்பு நடவடிக்கைக்காக அமெரிக்க அரசியலமைப்பில் உள்ள சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டம் 1977-ஐ அதிபர் டிரம்ப் பயன்படுத்தினார். வியாபார பற்றாக்குறையை குறைத்து அமெரிக்காவில் அதிக உற்பத்தியை ஊக்குவிப்பதே தன்னுடைய குறிக்கோள் என்று அவர் சொன்னார்.
மேலும், வருமானத்தை அதிகரிக்கவும், வியாபார பேச்சுவார்த்தைகளில் மற்ற நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கவும் அவர் வரி விதிப்பு நடவடிக்கையை பயன்படுத்தினார்.
இதற்கிடையில், அமெரிக்காவில் உள்ள சில மாகாண அரசுகள், விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தி நிறுவனம், ஒயின் இறக்குமதி நிறுவனம் உள்ளிட்ட சிறிய வியாபார நிறுவனங்களின் குழுக்கள் சேர்ந்து, டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்க கோர்ட்டில் வழக்கு போட்டனர். வரி விதிப்பு நடவடிக்கைக்கு, அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறி நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை டிரம்ப் தவறாக பயன்படுத்தியுள்ளார் என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.
டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளால், இறக்குமதி பொருட்களை நம்பி இருக்கும் வியாபார நிறுவனங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, விலை உயர்வு மற்றும் வேலை நீக்க நடவடிக்கைகளுக்கு வழி வகுத்ததாக கோர்ட்டில் வாதிடப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கு அமெரிக்க பெடரல் சர்க்யூட் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அவசர பொருளாதார அதிகார சட்டம் 1977, பெரிய வரி விதிப்பை அங்கீகரிக்கவில்லை என்று தீர்ப்பு அளித்தது. ஆனால் டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளை சட்டம் அனுமதிக்குமா என்பதை முடிவு செய்ய மறுத்துவிட்டது.
இதற்கிடையில், டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கை சட்டத்திற்கு எதிரானது என 3 கீழ் நீதிமன்றங்கள் தீர்ப்பு அளித்ததை தொடர்ந்து, இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், டிரம்ப்பின் வரி விதிப்புகள் செல்லாது என அதிரடியாக தீர்ப்பு சொல்லி உள்ளது.
அமெரிக்காவின் வியாபார கூட்டாளி நாடுகள் மீது கடுமையான இறக்குமதி வரிகளை விதித்ததன் மூலம் அதிபர் டிரம்ப் தன்னுடைய அதிகாரத்தை மீறி செயல்பட்டுள்ளார் என்று நீதிபதிகள் அவர்களின் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக இந்த வழக்கு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தபோது, டிரம்ப் நிர்வாகம் அவசர பொருளாதார அதிகார சட்டம் 1977-க்கு பதிலாக வரி விதிப்புக்கான வேறு வழிகளை கண்டுபிடிக்க ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / JANAKI RAM