தமிழகத்தில் பாஜக வளரவும் முடியாது, வெற்றி பெறவும் முடியாது - வைகோ
திருநெல்வேலி, 21 பிப்ரவரி (ஹி.ச.) திருநெல்வேலி மண்டல மதிமுக சார்பில் தேர்தல் நிதி மற்றும் கட்சி வளர்ச்சி நிதி வழங்கும் நிகழ்ச்சி திருநெல்வேலியில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பின்னர் மதிமுக பொதுச் செயலர் வைகோ செய்தியாளர்களுடன் பேசியதாவது: சம
பாஜக வளரவும் முடியாது, வெற்றி பெறவும் முடியாது - வைகோ


திருநெல்வேலி, 21 பிப்ரவரி (ஹி.ச.)

திருநெல்வேலி மண்டல மதிமுக சார்பில் தேர்தல் நிதி மற்றும் கட்சி வளர்ச்சி நிதி வழங்கும் நிகழ்ச்சி திருநெல்வேலியில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பின்னர் மதிமுக பொதுச் செயலர் வைகோ செய்தியாளர்களுடன் பேசியதாவது:

சமீபகாலமாக வைகோ நோய்வாய்ப்பட்டு படுத்துவிட்டார் என்று சிலர் திட்டமிட்டுப் பிரசாரம் செய்தனர். ஆனால், மதுரையில் நடைபெற்ற பிரம்மாண்ட நடைபயணம் மற்றும் பொதுக்கூட்டம் அத்தகைய பொய்க் கணக்குகளைத் தவிடு பொடியாக்கிவிட்டது.

1994-இல் எப்படி வீறுநடை போட்டேனோ, அதே ஊக்கத்துடன் இப்போதும் களத்தில் நிற்கிறேன். என் தொண்டர்கள் புதிய உற்சாகத்துடன் தேர்தல் களத்தைச் சந்திக்க ஆயத்தமாகி வருகிறார்கள். நான் முடங்க மாட்டேன், தமிழக வாழ்வாதாரங்களைக் காக்க களத்தில் முதல் வீரனாகச் செயல்படுவேன்

'பச்சை தாமிரம்' என்ற பெயரில் ஆலையை மீண்டும் திறக்க வேதாந்தா குழுமம் முயற்சி எடுக்கிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நான் நடத்திய போராட்டங்களால், ஸ்டெர்லைட் நிா்வாகம் எத்தனையோ பொய்ப் பழிகளை என் மீது சுமத்தியது. ஆனால், உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்தில் போராடி அந்த ஆலையை நிரந்தரமாக மூடச் செய்தேன்.

இப்போது இயந்திரங்களை அப்புறப்படுத்தாமல், 'பச்சை தாமிரம்' என்ற புதிய போர்வையில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனில் அகார்வால் முயல்கிறார். இதற்காக ஆள்களைக் கூலிக்கு அமர்த்தி ஆா்ப்பாட்டங்களைச் செய்து வருகிறார். விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சுற்றுச்சூழலை நாசமாக்கும் இந்த நச்சாலைக்குத் தமிழக அரசு ஒரு அங்குலம் கூட இடம் கொடுக்கக் கூடாது. மாசு கட்டுப்பாட்டு வாரியமும் அனுமதி வழங்கக் கூடாது. மீண்டும் நச்சாலையை திறக்க முயற்சித்தால் மதிமுக சார்பில் தூத்துக்குடியில் பிரம்மாண்ட கண்டனப் பொதுக்கூட்டம் மற்றும் அறப்போராட்டங்கள் நடத்தப்படும்

தூத்துக்குடியில் வரக்கூடிய பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். திமுக தனிப்பெரும்பான்மை பெறும் என்பதால், கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை.

முதல்வர் மு.க. ஸ்டாலின் 2026-க்கு பின்பும் திராவிட மாடல் ஆட்சியைத் தொடா்வார் என்று நான் பரிபூரணமாக நம்புகிறேன்.

திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கான குழுவை அமைத்த 10 நிமிடங்களிலேயே மதிமுக சார்பில் 4 போ் கொண்ட குழுவை அறிவித்துட்டேன். இதில் அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ், பொருளாளர் செந்தில் அதிபன், சுஜீவன் மற்றும் தேர்தல் பணிச் செயலாளர் சேசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் தொகுதிப் பங்கீடு குறித்து முடிவெடுப்பார்கள்.

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது கூடுதல் பலத்தைத் தந்துள்ளதோடு, கூட்டணியை இன்னும் வலிமையாக்கி உள்ளது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வரைப் பாராட்டி பேசியிருக்கிறார். அவர், தனது மகனுடன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்துள்ளார். இது அவர் கூட்டணிக்கு வருவதற்கான சமிக்கையை காட்டுகிறது. அவர் ஒரு பழுத்த அரசியல்வாதி, ஆழ்ந்து சிந்தித்தே இந்த முடிவை எடுத்துள்ளார்.

பிரதமர் மோடி மிகப்பெரிய தந்திரசாலி. அவர், சங்க இலக்கியங்கள், திருக்குறள், பாரதியார் பாடல்களில் சில வரிகளை எழுதி வைத்துக்கொண்டு, தமிழைப் புகழ்ந்து பேசித் தமிழக மக்களை ஏமாற்றப் பாா்க்கிறார். ஆனால், திராவிட இயக்கம் பல சோதனைகளைக் கடந்து வந்திருக்கிறது. இங்கே பாஜக வளரவும் முடியாது, வெற்றி பெறவும் முடியாது.

நாடாளுமன்றத்தில் 'வந்தே மாதரம்' பாடலின் நிராகரிக்கப்பட்ட நான்கு பாராக்களை மீண்டும் கட்டாயமாக்கும் மசோதாவைத் தங்களின் மிருகத்தனமான பெரும்பான்மையை வைத்து நிறைவேற்றியுள்ளனர். இது நாட்டின் கூட்டாட்சி தத்துவத்துக்கும், ஒருமைப்பாட்டுக்கும், மதச்சார்பின்மைக்கும் வேட்டு வைக்கிற வேலையை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் செய்திருக்கிறது. இதை என்னுடைய முழு சக்தியையும் பயன்படுத்தி கடுமையாக எதிர்க்கிறேன்.

இதனை அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். இதை எதிர்ப்பதற்கான களத்தை திமுக உருவாக்க வேண்டும். அடுத்ததாக இந்தியாவின் பெயரை 'பாரத்' என்று மாற்றவும், தலைநகரை தில்லியிருந்து வாராணசிக்கு மாற்றவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டின் ஒருமைப்பாட்டில் நம்பிக்கை உடையவர்கள் முழு மூச்சாக எதிர்க்க வேண்டும்

'நான் கழுவுகிற மீனில் நழுவுகிற மீன்' . இதனைத் தோ்தல் காலமும், கூட்டணிக் கட்சித் தலைவருமே முடிவு செய்வர். நாடாளுமன்றத்தில் கடந்த 30 ஆண்டுகளில் 1,360 முறை பேசி என் கடமையை ஆற்றியுள்ளேன். எனது உரைகளை 5 தொகுதிகளாக வெளியிட்டுள்ளேன். இதனைத் தேசியத் தலைவர்களான பினராயி விஜயன், சரத் பவார் உள்ளிட்டோரிடம் வழங்க உள்ளேன். இந்தியாவின் எல்லா பிரச்னைகளையும் நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறேன். நாடாளுமன்றத்தில் சிறப்பாக மனநிறைவாக பணியாற்றியிருக்கிறேன்

மாணிக்கம் தாகூர் என் மதிப்பிற்குரிய நண்பர். அவர், ராகுல் காந்திக்கும் நெருக்கமான நண்பர். அருமையாக வேலை செய்யக்கூடியவர். அவர் எனது விமர்சனத்துக்கு கடிந்து பதில் சொல்லாமல் கடந்து போவதாகக் கூறிவிட்டார். அது அவருடைய நாகரிகத்தைக் காட்டுகிறது. நானும் அதே நாகரிகத்தை பின்பற்றுகிறேன்

நெல்லை மண்டலத்தில் மதிமுக சார்பில் தேர்தல் நிதியாக ஏறக்குறைய ரூ.1.75 கோடி முதல் 2 கோடி வரை வசூலாக வாய்ப்புள்ளது.

சொந்த மாவட்டமான நெல்லையில் செய்தியாளர்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.

இவ்வாறு வைகோ கூறினார்.

Hindusthan Samachar / vidya.b