மார்ச் 1 ஆம் தேதி காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் மாசித் தேரோட்டம்
காஞ்சிபுரம், 21 பிப்ரவரி (ஹி.ச.) உலக புகழ்பெற்ற அம்மன் கோவில்களில் முதன்மையானதாக விளங்கும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஆண்டு தோறும் மாசித்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான மாசித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங
மார்ச் 1 ஆம் தேதி காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் மாசித் தேரோட்டம்


காஞ்சிபுரம், 21 பிப்ரவரி (ஹி.ச.)

உலக புகழ்பெற்ற அம்மன் கோவில்களில் முதன்மையானதாக விளங்கும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஆண்டு தோறும் மாசித்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான மாசித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடக்க நிகழ்வையொட்டி காமாட்சி அம்மன் உருவம் பொறித்த கொடிப் பட்டம் ஆலயத்தின் சுற்றுப்புற வளாகத்தில் பல்லக்கில்வைத்து கோவில் ஸ்தானிகர்களால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திருக்கோவில் அலங்கார மண்டபத்தில் இருந்து லட்சுமி சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி கொடிமரம் அருகே உள்ள மண்டபத்திற்கு எழுந்தருளினார். சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.

பின்னர் காமாட்சி அம்மன் உருவம் பொறித்த கொடியானது கோவில் தங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டு கொடிமரத்துக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.

கொடியேற்றத்தின் போது வண்ண மலர்கள் தூவப்பட்டன வாண வேடிக்கைகளும் நடைபெற்றன.

கொடியேற்ற விழா காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய பீடாதிபதி சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.

மாசித்திருவிழாவையொட்டி, நாள்தோறும் காலை,மாலை வெவ்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி நகரின் ராஜ வீதிகளில் வீதியுலா வரவுள்ளார்.

கொடியேற்ற விழாவில் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மூத்த மேலாளர் ந. சுந்தரேச ஐயர், மேலாளர் அரவிந்த் சுப்பிரமணியன், காஞ்சி காமாட்சி சங்கரமட வரவேற்பு குழு ஒருங்கிணைப்பாளர் காஞ்சி. ஜீவானந்தம் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கொடியேற்ற நிகழ்வு முடிந்தவுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் ராஜ வீதிகளில் வீதியுலா வந்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வெள்ளித் தேரோட்டம் மார்ச் 1 ஆம் தேதி நடைபெறுகிறது. மாா்ச் 4- ஆம் தேதி விஸ்வரூப தரிசனமும், அதனைத் தொடா்ந்து விடையாற்றி உற்சவமும் நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தானிகர்கள் சங்கர மடத்தின் நிர்வாகிகள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b